பாடல் #1427: ஐந்தாம் தந்திரம் – 3. மார்க்க சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் மூன்றாவது)
பொன்னாற் சிவசாதனம் பூசி சாதனம்
நன்மார்க சாதன நலஞான சாதனந்
துன்மார்க சாதனந் தோன்றாத சாதனஞ்
சன்மார்க சாதன மாஞ்சுத்த சைவர்க்கே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
பொனனாற சிவசாதனம பூசி சாதனம
நனமாரக சாதன நலஞான சாதனந
துனமாரக சாதனந தொனறாத சாதனஞ
சனமாரக சாதன மாஞசுதத சைவரககெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
பொன்னால் சிவ சாதனம் பூசி சாதனம்
நன் மார்க்க சாதனம் நல ஞான சாதனம்
துன் மார்க்க சாதனம் தோன்றாத சாதனம்
சன் மார்க்க சாதனம் ஆம் சுத்த சைவர்க்கே.
பதப்பொருள்:
பொன்னால் (தங்கத்தால் கோர்த்து) சிவ (இறைவனது அம்சமாக இருக்கின்ற) சாதனம் (மணிகள் போன்ற கருவிகளும்) பூசி (நறுமணப் பொருட்களை பூசிக் கொண்டும்) சாதனம் (இவற்றை கருவியாக கொண்டு பூஜை செய்கின்ற)
நன் (நன்மையைக் கொடுக்கும்) மார்க்க (வழிமுறைக்கான) சாதனம் (கருவியாக இருப்பதே) நல (பலவிதமான நலங்களை) ஞான (அறிந்து கொள்ளுகின்ற ஞானத்தை கொடுக்கின்ற) சாதனம் (கருவியாகவும் இருக்கின்றது)
துன் (தீமையைக் கொடுக்கும்) மார்க்க (வழிமுறைக்கான) சாதனம் (கருவி எதுவும்) தோன்றாத (நன்மையின் நெறி வழியே செல்லுகின்ற சாதகருக்கு தடையாக உருவாகாமல் இருக்க) சாதனம் (உதவுகின்ற கருவியாக)
சன் (உண்மை / சத்தியத்தின்) மார்க்க (வழிமுறையாகிய) சாதனம் (கருவியே) ஆம் (இருக்கின்றது) சுத்த (இதுவே சுத்தமான) சைவர்க்கே (சைவ நெறியை கடைபிடிக்கும் சைவர்களுக்கு இறைவனை அடைவதற்கு செல்லுகின்ற வழிமுறைகளாகவும் அதற்கான சாதகத்தை செய்ய உதவுகின்ற கருவிகளாகவும் இருக்கின்றது).
விளக்கம்:
இறைவனது அம்சமாக இருக்கின்ற மணிகளை (உருத்திராட்சம், துளசிமணி, ஸ்படிகம் போன்றவற்றை) தங்கத்தால் கோர்த்து செய்து அணிந்து கொண்டும் இறையருளுக்கு கருவியாக இருக்கின்ற நறுமணப் பொருள்களை (விபூதி, குங்குமம், சந்தனம், செந்தூரம், நாமம் போன்றவற்றை) பூசிக் கொண்டும் இவற்றை கருவியாக கொண்டு பூஜை எனும் சாதகத்தை செய்கின்ற வழிமுறையானது நன்மையைக் கொடுக்கும் வழிமுறையாகும். இதற்கு கருவியாக இருக்கின்ற மணிகளும் பூசிக்கொள்ளும் நறுமணப் பொருட்களும் பலவிதமான நலங்களை அறிந்து கொள்ளுகின்ற ஞானத்தை கொடுக்கின்ற கருவியாகவும் இருக்கின்றன. தீமையைக் கொடுக்கும் வழிமுறைக்கான கருவி எதுவும் நன்மையின் நெறி வழியே செல்லுகின்ற சாதகருக்கு தடையாக உருவாகாமல் இருக்கவும் இந்த கருவிகள் உதவுகின்றன. இவை அனைத்தும் சத்தியத்தின் வழிமுறையை பின்பற்றி இறைவனை அடைவதற்கு சாதகம் செய்கின்ற சுத்த சைவர்களுக்கு உதவுகின்ற கருவிகளாக இருக்கின்றன.