பாடல் #1550: ஐந்தாம் தந்திரம் – 22. நிராதாரம் (சாஸ்திரங்களை சார்ந்து இல்லாமல் உணர்வுகளை சார்ந்து இருத்தல்)
இமையங்க ளாய்நின்ற தேவர்க ளாறு
சமையங்கள் பெற்றனர் சாத்திர மோத
வமையறிந் தோமென்ப ராதிப் பிரானைக்
கமையறிந் தாருட் கலந்துநின் றானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
இமையஙக ளாயநினற தேவரக ளாறு
சமையஙகள பெறறனர சாததிர மொத
வமையறிந தொமெனப ராதிப பிரானைக
கமையறிந தாருட கலநதுநின றானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
இமையங்கள் ஆய் நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓத
அமை அறிந்தோம் என்பர் ஆதி பிரானை
கமை அறிந்தார் உள் கலந்து நின்றானே.
பதப்பொருள்:
இமையங்கள் (இமயத்தை) ஆய் (போல உயர்ந்த நிலையில்) நின்ற (நிற்கின்ற) தேவர்கள் (தேவர்கள்) ஆறு (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான)
சமையங்கள் (வழி முறைகளை) பெற்றனர் (இறைவனிடமிருந்து பெற்றனர்) சாத்திரம் (அவர்கள் பெற்ற வழி முறைகளின் படி சாஸ்திரங்களை) ஓத (ஓதுவதின் மூலமே)
அமை (இறைவனை அடைவதற்கான வழியை) அறிந்தோம் (அறிந்து கொண்டோம்) என்பர் (என்று அவர்கள் கூறுகின்றார்கள்) ஆதி (அனைத்திற்கும் ஆதியாகவும்) பிரானை (தலைவனாகவும் இருக்கின்ற இறைவனை)
கமை (எந்தவிதமான எண்ணங்களும் இல்லாத பேரமைதியில் இருந்து) அறிந்தார் (அறிந்து கொண்டவர்களின்) உள் (உள்ளுக்குள் ஒன்றாக) கலந்து (கலந்து) நின்றானே (நிற்கின்றான் இறைவன்).
விளக்கம்:
இமயத்தை போல உயர்ந்த நிலையில் நிற்கின்ற தேவர்கள் இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளை இறைவனிடமிருந்து பெற்றனர். அவர்கள் பெற்ற வழி முறைகளின் படி சாஸ்திரங்களை ஓதுவதின் மூலமே இறைவனை அடைவதற்கான வழியை அறிந்து கொண்டோம் என்று அவர்கள் கூறுகின்றார்கள். அனைத்திற்கும் ஆதியாகவும் தலைவனாகவும் இருக்கின்ற இறைவனை எந்தவிதமான எண்ணங்களும் இல்லாத பேரமைதியில் இருந்து அறிந்து கொண்டவர்களின் உள்ளுக்குள் ஒன்றாக கலந்து நிற்கின்றான் இறைவன்.
கருத்து:
ஆறு சமயங்கள் சொல்லுகின்ற வழி முறையில் சாஸ்திரங்களை ஓதுவதன் மூலம் மட்டுமே இறைவனை அடைவதற்கான வழியை அறிந்து கொண்டோம் என்று மேன்மையான நிலையில் இருக்கின்ற தேவர்கள் சொல்லுவார்கள். ஆனால், எந்த சாஸ்திரத்தையும் ஓதாமல் இருந்தாலும் மனதில் அமைதியுடன் எண்ணங்கள் அற்ற நிலையில் ஒருவர் இருந்தாலே அவர்களால் தமக்குள்ளேயே கலந்து நிற்கின்ற இறைவனை அறிந்து கொள்ள முடியும்.
இறைவனை அடையும் முறையான ஆறு வித வழிகள்:
- தியானம் – மந்திரத்தை மனதிற்குள் தியானித்தல்
- செபம் – அக வழிபாடு மூலம் செபித்தல்
- பூஜை – புற வழிபாடு மூலம் செபித்தல்
- சக்கரம் – சக்கரங்கள் அமைத்து செபித்தல்
- ஞானம் – மந்திரத்தின் பொருளை தேடி ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல்
- புத்தி – மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்தையும் ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல்
குறிப்பு: இந்த பாடலின் தலைப்பு நிராசாரம் என்றும் நிராகாரம் என்றும் பல புத்தகங்களில் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனால் ஓலை சுவடியில் நிராதாரம் என்று கொடுக்கப் பட்டு இருக்கிறது மேலும் இந்த தலைப்பில் உள்ள பாடல் #1556 இல் மூன்றாவது அடியில் வரும் “சார் உறார்” எனும் பதத்தை ஒத்து இருப்பதாலும் இதனை ஆதாரமாகக் கொண்டு நிராதாரம் என்ற தலைப்பு எடுத்துக் கொள்ளப் பட்டது.