பாடல் #1527: ஐந்தாம் தந்திரம் – 20. தீவிர தரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி அதி விரைவாக வருகின்ற தன்மை)
இருவினை நேரொப்பி லின்னருட் சத்தி
குருவென வந்து குணம்பல நீக்கித்
தருமெனு ஞானத்தாற் றன்செய லற்றால்
திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
இருவினை நெரொபபி லினனருட சததி
குருவென வநது குணமபல நீககித
தருமெனு ஞானததாற றனசெய லறறால
திரிமலந தீர்நது சிவனவ னாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
இரு வினை நேர் ஒப்பு இல் இன் அருள் சத்தி
குரு என வந்து குணம் பல நீக்கி
தரும் எனும் ஞானத்தால் தன் செயல் அற்றால்
திரி மலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே.
பதப்பொருள்:
இரு (நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான) வினை (வினைகளையும்) நேர் (சரிசமமாக பாவித்து அனுபவிக்கும் நிலையை அடைந்த சாதகருக்குள்) ஒப்பு (தனக்கு ஒப்பானது என்று) இல் (ஒன்றும் இல்லாதவளாகிய) இன் (இனிமையான) அருள் (பேரருளைக் கொண்ட) சத்தி (இறைவியானவள்)
குரு (குரு) என (எனும் நிலையில்) வந்து (வந்து) குணம் (சாதகருக்குள் நன்மை தீமை ஆகிய தன்மைகள்) பல (பல விதமாக இருப்பவை அனைத்தையும்) நீக்கி (நீக்கி விட்டு)
தரும் (அவளது பெரும் கருணையினால் தரப்படுவது) எனும் (என்று அறியப்படுகின்ற) ஞானத்தால் (பேரறிவு ஞானத்தால்) தன் (சாதகர் தன்னுடைய) செயல் (செயல் என்று ஒன்றும்) அற்றால் (இல்லாமல் இருக்கும் நிலையை அடைந்து விட்டால்)
திரி (சாதகருக்குள் இருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான) மலம் (மலங்களும்) தீர்ந்து (நீங்கப் பெற்று) சிவன் (சிவம் எனும் பரம் பொருளாகவே) அவன் (சாதகரும்) ஆமே (ஆகி விடுவார்).
விளக்கம்:
நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான வினைகளையும் சரிசமமாக பாவித்து அனுபவிக்கும் நிலையை அடைந்த சாதகருக்குள் தனக்கு ஒப்பானது என்று ஒன்றும் இல்லாதவளாகிய இனிமையான பேரருளைக் கொண்ட இறைவியானவள் குரு எனும் நிலையில் வந்து சாதகருக்குள் நன்மை தீமை என்று பல விதமாக இருக்கின்ற அனைத்து தன்மைகளையும் நீக்கி விட்டு, அவளது பெரும் கருணையினால் தரப்படுவது என்று அறியப்படுகின்ற பேரறிவு ஞானத்தை தந்து அருளுவாள். அந்த ஞானத்தால் சாதகர் தன்னுடைய செயல் என்று ஒன்றும் இல்லாமல் இருக்கும் நிலையை அடைந்து விட்டால் சாதகருக்குள் இருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான மலங்களும் நீங்கப் பெற்று சிவம் எனும் பரம் பொருளாகவே சாதகரும் ஆகி விடுவார்.
