பாடல் #1502: ஐந்தாம் தந்திரம் – 12. தாச மார்க்கம் (இறைவனை எஜமானராகவும் தம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழி முறை)
எளியன தீபமிட லலர் கொய்த
லளியின் மெழுக லதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிபணி பற்றல் பன்மஞ் சனமாதி
தளிதொழில் செய்வது தான்றாச மார்கமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
எளியன தீபமிட லலர கொயத
லளியின மெழுக லதுதூரததல வாழததல
பளிபணி பறறல பனமஞ சனமாதி
தளிதொழில செயவது தானறாச மாரகமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
எளியன தீபம் இடல் அலர் கொய்தல்
அளி இன் மெழுகல் அது தூர்த்தல் வாழ்த்தல்
பளி பணி பற்றல் பன் மஞ்சனம் ஆதி
தளி தொழில் செய்வது தான் தாச மார்கமே.
பதப்பொருள்:
எளியன (தங்களால் இயன்ற வரை) தீபம் (தீபங்களை) இடல் (ஏற்றி வைத்தல்) அலர் (நறுமணமிக்க மலர்ந்த மலர்களை) கொய்தல் (கொய்து அணிவித்தல்)
அளி (இறைவன் இருக்கின்ற) இன் (இடங்களை) மெழுகல் (சாணி பூசி மெழுகி) அது (அந்த இடத்தை) தூர்த்தல் (சுத்தமாக வைத்தல்) வாழ்த்தல் (இறைவனின் புகழ்களை பாடி வாழ்த்துதல்)
பளி (இறைவன் அமர்ந்து வருகின்ற பல்லக்கு) பணி (சேவை செய்வதற்கு) பற்றல் (பல்லக்கின் கழிகளை பற்றிக் கொண்டு வலம் வருதல்) பன் (பல விதமான) மஞ்சனம் (அபிஷேகப் பொருள்களை கொண்டு அபிஷேகம் செய்தல்) ஆதி (முதல் கொண்டு)
தளி (கோயில்களுக்கு) தொழில் (தேவையான தொண்டுகளில் தங்களால் இயன்ற அளவு) செய்வது (செய்து பணி புரிவது) தான் (தான்) தாச (இறைவனை எஜமானராகவும் தம்மை அடியவராகவும் பாவிக்கின்ற) மார்கமே (வழி முறையாகும்).
விளக்கம்:
தங்களால் இயன்ற வரை தீபங்களை ஏற்றி வைத்தல் நறுமணமிக்க மலர்ந்த மலர்களை கொய்து சாற்றுதல் இறைவன் இருக்கின்ற இடங்களை சாணி பூசி மெழுகி அந்த இடத்தை சுத்தமாக வைத்தல் இறைவனின் புகழ்களை பாடி வாழ்த்துதல் இறைவன் அமர்ந்து வருகின்ற பல்லக்கு சேவை செய்வதற்கு பல்லக்கின் கழிகளை பற்றிக் கொண்டு வலம் வருதல் பல விதமான அபிஷேகப் பொருள்களை கொண்டு அபிஷேகம் செய்தல் முதல் கொண்டு கோயில்களுக்கு தேவையான தொண்டுகளில் தங்களால் இயன்ற அளவு செய்து பணி புரிவது தான் இறைவனை எஜமானராகவும் தம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழி முறையாகும்.
