பாடல் #1495: ஐந்தாம் தந்திரம் – 11. சற்புத்திர மார்க்கம் (இறைவனை உண்மையான தந்தையாக பாவித்து அவனை அடைகின்ற வழி முறை)
மேவிய சற்புத்திர மார்க மெய்த்தொழில்
தாவிப் பதாஞ்சக மார்கஞ் சகத்தொழி
லாவ திரண்டு மகன்று சகமார்கத்
தேவியோ டொன்றல் சன்மார்கத் தெளிவே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
மெவிய சறபுததிர மாரக மெயததொழில
தாவிப பதாஞசக மாரகஞ சகததொழி
லாவ திரணடு மகனறு சகமாரகத
தெவியொ டொனறல சனமாரகத தெளிவெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
மேவிய சற் புத்திர மார்கம் மெய் தொழில்
தாவிப்பது ஆம் சக மார்கம் சக தொழில்
ஆவது இரண்டும் அகன்று சக மார்க
தேவியோடு ஒன்றல் சன் மார்க தெளிவே.
பதப்பொருள்:
மேவிய (உறவினால்) சற் (உண்மையான தந்தையாக இறைவனையும்) புத்திர (அவருக்கு பிள்ளையாக தம்மையும் பாவிக்கின்ற) மார்கம் (வழி முறையானது) மெய் (உடலால் செய்கின்ற) தொழில் (அனைத்து விதமான செயல்கள் மற்றும்)
தாவிப்பது (சரியாக செய்ய வைக்க) ஆம் (இறை சக்தி உடனிருந்து) சக (தோழமை) மார்கம் (வழி முறையில்) சக (மனதுடன் எப்போதும் சேர்ந்து இருந்து செய்கின்ற) தொழில் (அனைத்து விதமான செயல்கள்)
ஆவது (ஆகிய இந்த) இரண்டும் (இரண்டு விதமான செயல்களையும் நாம் செய்கின்றோம் என்கின்ற எண்ணமும் நமது உடலும் மனமும் இவற்றை செய்கின்றன என்கின்ற எண்ணமும்) அகன்று (நீங்கும் படி செய்து) சக (தோழமை) மார்க (வழி முறையில்)
தேவியோடு (தம்மோடு எப்போதும் தொடர்ந்து வருகின்ற இறை சக்தியோடு) ஒன்றல் (ஒன்றாக சேர்ந்து அனைத்தையும் இறை சக்தியே செய்கிறது என்கின்ற எண்ணத்தில் இருப்பதே) சன் (உண்மை) மார்க (வழி முறையில் மேன்மையான நிலையில்) தெளிவே (கிடைக்கின்ற தெளிவு ஆகும்).
விளக்கம்:
உறவினால் உண்மையான தந்தையாக இறைவனையும் அவருக்கு பிள்ளையாக தம்மையும் பாவிக்கின்ற வழி முறையானது உடலால் செய்கின்ற அனைத்து விதமான செயல்கள் மற்றும் சரியாக செய்ய வைக்க இறை சக்தி உடனிருந்து தோழமை வழி முறையில் மனதுடன் எப்போதும் சேர்ந்து இருந்து செய்கின்ற அனைத்து விதமான செயல்கள் ஆகிய இந்த இரண்டு விதமான செயல்களையும் நாம் செய்கின்றோம் என்கின்ற எண்ணமும், நமது உடலும் மனமும் இவற்றை செய்கின்றன என்கின்ற எண்ணமும் நீங்கும் படி செய்து, தோழமை வழி முறையில் தம்மோடு எப்போதும் தொடர்ந்து வருகின்ற இறை சக்தியோடு ஒன்றாக சேர்ந்து அனைத்தையும் இறை சக்தியே செய்கிறது என்கின்ற எண்ணத்தில் இருப்பதே உண்மை வழி முறையில் மேன்மையான நிலையில் கிடைக்கின்ற தெளிவு ஆகும்.