பாடல் #1497

பாடல் #1497: ஐந்தாம் தந்திரம் – 11. சற்புத்திர மார்க்கம் (இறைவனை உண்மையான தந்தையாக பாவித்து அவனை அடைகின்ற வழி முறை)

அறுகாற் பறவை யலர்தேர்ந் துழலு
மறுகால் நரையன்னந் தாமரை நீலங்
குறுகார் நறுமலர் கொய்வன கண்டுஞ்
சிறுகா லரனெறி செல்லுகி லாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அறுகாற பறவை யலரதெரந துழலு
மறுகால நரையனனந தாமரை நீலங
குறுகார நறுமலர கொயவன கணடுஞ
சிறுகா லரனெறி செலலுகி லாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அறு கால் பறவை அலர் தேர்ந்து உழலும்
மறு கால் நரை அன்னம் தாமரை நீலம்
குறுகார் நறு மலர் கொய்வன கண்டும்
சிறு கால் அரன் நெறி செல்லு கிலாரே.

பதப்பொருள்:

அறு (ஆறு) கால் (கால்களைக் கொண்ட) பறவை (தேனீக்கள்) அலர் (தேனுள்ள மகரந்த மலர்களை) தேர்ந்து (ஆராய்ந்து தேடி) உழலும் (அலைந்து தேனை சேகரிப்பதையும்)
மறு (இன்னொரு) கால் (வகையில்) நரை (வெள்ளை நிறத்தில் உள்ள) அன்னம் (அன்னப் பறவைகள்) தாமரை (தாமரை மலர்களையும்) நீலம் (நீலோற்பல மலர்களையும் தேடிச் சென்று அதன் தண்டுகளில் இருக்கும் பாலை சேகரிப்பதையும்)
குறுகார் (இறைவனின் அடியவர்கள்) நறு (நறுமணம் மிக்க) மலர் (மலர்களை) கொய்வன (கொய்து மாலையாக கோர்த்து இறைவனுக்கு சாற்றி வணங்கி அருளை சேகரிப்பதையும்) கண்டும் (பார்த்தும்)
சிறு (சிறுது) கால் (காலம் கூட) அரன் (தமக்கு தந்தை போல அரனாக இருக்கின்ற இறைவனின்) நெறி (அருளைப் பெறும் வழியில்) செல்லு (செல்லாமல்) கிலாரே (இருக்கின்றார்கள்).

விளக்கம்:

ஆறு கால்களைக் கொண்ட தேனீக்கள் தேனுள்ள மகரந்த மலர்களை ஆராய்ந்து தேடி அலைந்து தேனை சேகரிப்பதையும் இன்னொரு வகையில் வெள்ளை நிறத்தில் உள்ள அன்னப் பறவைகள் தாமரை மலர்களையும் நீலோற்பல மலர்களையும் தேடிச் சென்று அதன் தண்டுகளில் இருக்கும் பாலை சேகரிப்பதையும் இறைவனின் அடியவர்கள் நறுமணம் மிக்க மலர்களை கொய்து மாலையாக கோர்த்து இறைவனுக்கு சாற்றி வணங்கி அருளை சேகரிப்பதையும் பார்த்தும் சிறுது காலம் கூட தமக்கு தந்தை போல அரனாக இருக்கின்ற இறைவனின் அருளைப் பெறும் வழியில் செல்லாமல் இருக்கின்றார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.