பாடல் #868: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)
கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்
பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும்
அதிரவ னண்டப் புறஞ்சென் றடர்ப்ப
எதிரவ னீசன் இடமது தானே.
விளக்கம்:
சூரிய கலை சந்திர கலை ஆகிய இரண்டு நாடிகளும் உயிர்களின் உடலுக்கான காலத்தை அளக்கும் கருவிகளாகும். சூரிய கலை சந்திர கலை இரண்டும் தனித் தனியாக இருக்கும் வரை உயிர்கள் காலத்துக்கு கட்டுப் பட்டவையாகும். சந்திர யோகத்தால் இரு நாடிகளையும் மாற்றி சுழுமுனை வழியே மேலே கொண்டு செல்கிற யோகியின் உடலில் சூரிய கலையும் சந்திர கலையும் சகஸ்ரதளத்தில் ஒன்று சேரும் போது அங்கே அமுதம் விளையும். அங்கிருந்து தலைக்கு மேல் உள்ள துவாதசாந்த வெளியில் இறை சக்தியை ஒலியாக கேட்டு அதையும் தாண்டிய பரவெளியில் இறை சக்தியை ஒளியாக தரிசித்து அதையும் தாண்டிய அண்ட வெளியே சிவனது இருப்பிடம் என்பதை உணரலாம்.