பாடல் #767: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)
அவனிவ னாகும் பரிசறி வார்இல்
அவனிவ னாகும் பரிசது கேள்நீ
அவனிவ னோசை ஒளியினுள் ஒன்றி
அவனிவன் வட்டம தாகிநின் றானே.
விளக்கம்:
தாமும் இறைவனாகவே ஆகிவிடும் பெரும் பயனை அறிந்து கொண்டவர்கள் யாரும் இல்லை. தாமும் இறைவனாகவே ஆகிவிடும் பெரும் பயனைப் பற்றிக் கேட்டுக்கொள்ளுங்கள். பாடல் #765 இல் உள்ளபடி ஓங்கார மந்திரத்தில் அகாரம் எனும் ஒலியாக இருப்பவன் சிவம். உகாரம் எனும் ஒளியாக இருப்பவள் சக்தி. மகாரம் எனும் குண்டலினியாக இருப்பது உயிர்கள். உயிர்களின் உடலுக்குள் இருக்கும் ஆறு ஆதார சக்கரங்களில் சக்திமயமாகவும் ஏழாவது சக்கரமான சகஸ்ரதளத்தில் ஒளியாகவும் எட்டாவது இடமான துவாதசாந்த வெளியில் ஒலியாகவும் இருக்கின்ற இறைவனே பிரணவ மந்திரத்திலுள்ள மூன்று எழுத்துக்களின் தத்துவம் என்பதை உணர்ந்து அந்த இடங்களோடு தமது உயிர்சக்தியைக் கலந்து நிற்கின்றவனே இறைவனாக ஆகிவிடுகின்றான்.
கருத்து: பிரணவ மந்திரத்தின் தத்துவம் ஒலியாகிய சிவமும், ஒளியாகிய சக்தியும், உயிராகிய ஆன்மாக்களும் ஒன்றாகக் கலந்து ஒன்றோடு ஒன்று வேறுபடாமல் இருப்பதே ஆகும். இதை உணர்ந்து அறிந்து கொண்டவர்கள் இறைவனாக ஆகிவிடுகிறார்கள்.