பாடல் #765: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)
கூறும் பொருளி தகார வுகாரங்கள்
தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக்
கூறும் மகாரங் குழல்வழி யோடிட
ஆறும் அமர்ந்திருக்கும் அண்ணலு மாமே.
விளக்கம்:
பாடல் #764 ல் உள்ளபடி தம்மை நாடி வருபவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு கூறும் பொருளானது ஓங்கார மந்திரத்தின் அகார உகார விளக்கமாகும். அகார உகார மகார எழுத்துக்கள் (அ, உ, ம்) சேர்ந்ததே ஓம் எனும் மந்திரம். அதில் அகாரம் சிவத்தையும் உகாரம் சக்தியையும் மகாரம் உயிரையும் குறிக்கும். குருவானவர் கூறிய ஓம் எனும் மந்திரத்தை தமது சிந்தனையுள் எப்போது நினைத்துக் கொண்டே இருக்கும் சாதகர்களுக்கு ஓம் என்னும் மந்திரத்தின் பொருள் உயிர்கள் தமக்குள் ஒளிந்திருக்கும் குண்டலினி சக்தியே என்பதை உணர்ந்து அதை மூலாதாரத்திலிருந்து எழுப்பி சுழுமுனை நாடி வழியே தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் இறைசக்தியோடு சேர்த்துவிட்டால் அவர்களுக்குள் இருக்கும் ஆறு ஆதாரச் சக்கரங்களிலும் சக்திமயமாக அமர்ந்து இருக்கும் இறைசக்தியும் தாமே என்பதை உணர்ந்து கொள்வார்கள்.
கருத்து: ஓம் என்னும் மந்திரத்தில் இருக்கும் பொருளை குருவானவரிடம் கேட்டுத் தமக்குள் அதை உணர்ந்த சாதகர்கள் மகாரமாகிய தங்களின் உயிர்சக்தியை அகாரமாகிய சிவத்தோடும் உகாரமாகிய சக்தியோடும் கலந்துவிட்டால் அவர்கள் இறைவனாக ஆகிவிடுவார்கள்.