பாடல் #761: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)
காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள்
நாணகி லார்நயம் பேசி விடுவர்கள்
காணகி லாதார் கழிந்த பொருளெலாங்
காணகி லாமலே கழிகின்ற வாறே.
விளக்கம்:
பாடல் #760 இல் உள்ளபடி இறை சக்தியைத் தமக்குள் கண்டு உணராதவர்கள் தங்களின் வாழ்க்கையை வீணே வாழ்ந்து கழித்து மீண்டும் பிறக்கும்படி இறந்து போகின்றார்கள். இறை சக்தியை அடையும் வழியைக் கற்று அறிந்தவர்கள் கூட தாம் கற்ற கல்வியை உபயோகித்துப் பயன் பெறாமல் அதைப் பற்றி பலவிதமாகப் பேசுவதில் காலத்தை கழித்துக் கொண்டு தாம் கற்றதெல்லாம் பயனில்லாமல் போகின்றதென்ற நாணம் இல்லாமல் காலத்தை வீணடிக்கின்றார்கள். இறை சக்தியைத் தமக்குள் கண்டு உணராததால் தம்மை விட்டுப் போகின்ற அருட்செல்வங்கள் என்ன என்பதையும் காணமலேயே இவர்களின் காலம் வீணாகக் கழிந்துவிடுகின்றது.
கருத்து: இறைவனை அடையவே சாஸ்திரங்களும் கலைகளும் இறைவனால் அருளப்பட்டன. இதை அறியாமல் கற்றவர் கல்லாதவர் ஆகிய இரண்டு வகையினருமே காலத்தை வீணடித்து இறைவனை அறியாமலேயே இறந்து போகின்றார்கள்.