பாடல் #759: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)
உகங்கோடி கண்டும் ஒசிவற நின்று
அகங்கோடி கண்டுள் அயலறக் காண்பர்
சிவங்கோடி விட்டுச் செறிய இருந்தங்
குகங்கோடி கண்டங் குயருறு வாரே.
விளக்கம்:
பாடல் #758 இல் உள்ளபடி கோடி யுகங்களைக் கண்ட யோகியர்கள் சிறிதும் தளர்வின்றி தமது அகயோகத்திலேயே நிலைபெற்று நின்று தான் எனும் எண்ணம் இல்லாமல் இறைவனும் தாமும் வேறு இல்லை என்பதையும் காண்பார்கள். தமக்குள் உணர்ந்த சிவத்தின் ஒளியுருவத்தையும் கடந்து உருவமும் குணமும் இல்லாத இறை நிலையை அடைந்து பல கோடி யுகங்களையும் கண்டு அனைத்திற்கும் மேலானதொரு நிலையை அடைவார்கள்.
கருத்து: கோடி யுகங்கள் கண்டும் தளர்வில்லாமல் நிலைபெற்று நிற்கும் அகயோகிகள் அதன் பிறகு சிவ நிலையையும் கடந்த பரநிலையில் பலகோடி யுகங்கள் கண்டு அனைத்திற்கும் மேலான நிலையை அடைவார்கள்.
