பாடல் #754: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)
சுழல்கின்ற வாறின் துணைமலர் காணான்
தழலிடைப் புக்கிடுந் தன்னு ளிலாமற்
கழல்கண்டு போம்வழி காணவல் லார்க்குக்
குழல்வழி நின்றிடுங் கூத்தனு மாமே.
விளக்கம்:
பிறவிச் சுழற்சியில் சிக்கிக்கொண்டு பிறந்து கொண்டே இருக்கின்ற உயிர்கள் தம்மோடு எப்போதும் துணையாக இருக்கும் இறைவனின் திருவடியைத் தாங்கிக் கொண்டு இருக்கின்ற மலரைக் காண்பதில்லை. இறந்த பிறகு நெருப்பில் இடப்படும் இந்த உடலை நிரந்தரம் என்று எண்ணாமல் தமக்குள்ளேயே துணையாக இருக்கும் இறைவனே என்றும் நிரந்தரம் என்பதை உணர்ந்து அவனது திருவடிகளைச் சென்று அடையும் வழியான சுழுமுனை நாடியைக் கண்டுகொண்டவர்கள் அதன் வழியே சென்று அடையும் தலை உச்சியைத் தாண்டிய துவாதசாந்த வெளியில் திருநடனம் புரிந்து கொண்டிருக்கும் இறைவனை கண்டு உணர்ந்து அவனோடு கலந்து பேரின்பத்தில் இருக்கலாம்.
கருத்து: இறந்த பிறகு நெருப்புக்கு இரையாகும் உடலை பற்றிக்கொண்டு பிறவிச் சுழற்சியில் சிக்கிக் கொள்ளாமல் உடலுக்குள் ஏழாவது சக்கரத்தில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் இறைவன் ஒளி உருவமாக வீற்றிருப்பதை பார்த்து இறைவனின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு அவனோடு கலந்து பேரின்பத்தில் எப்போதும் நிலைத்து வாழலாம்.
