பாடல் #752: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)
தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு
மண்டல மூன்று மகிழ்ந்துடல் ஒத்திடுங்
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்
பிண்டம் பிரியவே பிணங்குகின் றாரே.
விளக்கம்:
சுழுமுனை நாடியின் வழியே மூச்சுக்காற்றை மேலேற்றிச் சென்று தலை உச்சியிலிருக்கும் சகஸ்ரதள ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரோடு கலந்து விடும் அகயோகத்தை செய்த சாதகர்கள் சகஸ்ரதளத்தையும் தாண்டிய துவாதசாந்த வெளியிலிருக்கும் அக்கினி, சந்திர, சூரிய மண்டலங்களோடு (பாடல் #746 ல் உள்ளபடி) உணர்வு ஒடுங்கி இருந்தால் பேரின்பத்தில் திளைத்து அந்த மண்டலங்களோடு கலந்து நீண்ட காலம் அழியாமல் அழகுடன் இருப்பார்கள். இந்த நிலையை அகயோகப் பயிற்சியினால் முயற்சி செய்து அடைந்தவர்கள் மட்டுமே கண்டு உணர்கின்றார்கள். தங்களின் தீவினைப் பயனால் இந்தப் பயிற்சியைப் பற்றித் தெரியாமலோ அல்லது இதைச் செய்யாமல் வேறு வழிகளில் முயன்று தோல்வியடைந்தவர்களோ தங்களின் உடலை விட்டு உயிர் பிரிந்து மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவிச் சுழற்சியில் சிக்கிக் கொண்டு வருந்துகின்றார்கள்.
கருத்து: அகயோகத்தை செய்பவர்கள் அதைப் பெற்று பேரின்பத்தில் திளைத்து பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபடுவார்கள். மற்றவர்கள் தங்களின் தீவினைப் பயனால் பிறவித் துன்பத்திலேயே கிடந்து வருந்துகின்றார்கள்.