பாடல் #750: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)
நண்ணுஞ் சிறுவிர னாணாக மூன்றுக்கும்
பின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடுஞ்
சென்னியின் மூன்றுக்குஞ் சேரவே நின்றிடில்
உன்னி உணர்ந்திடும் ஓவியந் தானே.
விளக்கம்:
கட்டை விரலால் சுண்டு விரலைப் பிடித்துக் கொண்டு மற்ற மூன்று விரல்களையும் நேராக நீட்டினால் வரும் முத்திரை வில்லில் ஏற்றிய அம்புகள் போல இருக்கும் மூன்று விரல்களைப் போலவே இடகலை, பிங்கலை மற்றும் சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளும் மார்பில் உள்ள இதயத்தில் பின்னிப் பிணைந்து பிரியாமல் ஒன்றாகச் சேர்ந்து இருக்கின்றன. அதைப் போலவே மூன்று நாடிகளையும் தலையிலுள்ள மூன்று ஆதாரச் சக்கரங்களோடு (விசுக்தி, ஆக்ஞா, சகஸ்ரதளம்) ஒன்றாகப் பொருந்தும் படி செய்து மூச்சுக்காற்றை சகஸ்ரதளத்திற்கு மேலே இருக்கும் மூன்று மண்டலங்களோடும் (அக்கினி, சந்திர, சூரிய மண்டலங்கள் பாடல் #746 இல் உள்ளபடி) கலக்கும் படி செய்து எண்ணங்களை மொத்தமும் அதிலேயே வைத்து காகிதத்தில் வரைந்த ஓவியம் போல எந்த அசைவும் இன்றி இருந்தால் உண்மை ஞானத்தை உணர்ந்து உடல் என்றும் அழியாத அழகான ஓவியம் போல இளமையுடன் நீண்ட காலம் இருக்கும்.
கருத்து: அகயோகப் பயிற்சியின்படி ஒன்றாக இருக்கும் மூன்று நாடிகளைகளோடு மூச்சுக்காற்றையும் மூன்று மண்டலங்களோடும் கலந்து தியானித்தால் உண்மை ஞானத்தை உணர்ந்து உடல் என்றும் அழியாத ஓவியம் போல இருக்கும்.