பாடல் #745: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)
நாலுங் கடந்தது நால்வரும் நாலைந்து
பாலங் கடந்தது பத்துப் பதினைந்து
கோலங் கடந்த குணத்தாண்டு மூவிரண்
டாலங் கடந்ததுஒன் றாரறி வாரே.
விளக்கம்:
பாடல் #744 இல் உள்ளபடி துவாதசாந்த வெளியில் இறைவன் நான்கு உயர் தத்துவங்களாக இருப்பதை உணர்ந்த யோகியர்கள் அதையும் தாண்டிய நிலையில் பாடல் #467 இல் உள்ளபடி ஒன்பது துவாரங்கள் இருபத்தைந்து தத்துவங்களால் ஆன உருவத்தைத் தாண்டி அதைச் சுற்றியிருக்கும் குணங்களைக் கொண்ட ஐந்துவித கோசங்களையும் தாண்டி அண்டசராசரங்கள் அனைத்தையும் தாண்டிய ஒரே பொருளாக இருப்பதை அறிந்துகொள்வதில்லை.
கருத்து: இறைவனை நான்கு உயர் தத்துவங்களாக உணர்ந்த யோகியர்களாலும் இறைவன் அனைத்தையும் கடந்த ஒரே பொருளாக இருப்பதை உணர்ந்துகொள்வதில்லை.
ஐந்து கோசங்கள்:
- அன்னமயம் – உணவினால் உருவாகும் உடல்.
- பிராணமயம் – மூச்சுக்காற்றால் உருவாகும் உயிர்.
- மனோமயம் – மனதினால் உருவாகும் எண்ணங்கள்.
- விஞ்ஞானமயம் – அறிவினால் உருவாகும் ஞானம்.
- ஆனந்தமயம் – உண்மை ஞானமாகிய பேரறிவால் உருவாகும் பேரின்பம்.