பாடல் #733: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)
மாறா மலக்குதந் தன்மே லிருவிரற்
கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்
ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன்
கூறா உபதேசங் கொண்டது காணுமே.
விளக்கம்:
எப்போதும் மாறாத மலத்தைக் கொண்டிருக்கும் மலத்துவாரத்திற்கு இரண்டு விரற்கடை மேலேயும் சொல்லாமல் உணரும் பாலுணர்ச்சியின் குறிக்கு இரண்டு விரற்கடை கீழேயும் உள்ள இடமே மூலாதாரம் இருக்கும் இடமாகும். அந்த இடத்தின் மேல் எண்ணத்தை வைத்து பாடல் #731 இல் கொடுத்துள்ள மந்திரத்தை மனதிற்குள் தியானித்தால் உடலிலுள்ள ஆறு ஆதாரங்களிலும் உள்ள இறை சக்தியே அங்கேயும் அக்கினியாக இருக்கிறது என்பதை கண்டு உணரலாம்.
கருத்து: உடலிலுள்ள அனைத்து சக்திமயங்களிலும் இறை சக்தியே இருக்கின்றது. மூலாதாரத்தை எண்ணி மந்திரத்தால் மனதிற்குள் தியானிக்க ஆறு ஆதாரங்களிலும் உள்ள இறை சக்தியே உணரலாம்.