பாடல் #732: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)
உந்திச் சுழியி னுடனேர் பிராணனைச்
சிந்தித் தெழுப்பிச் சிவமந் திரத்தினால்
முந்தி முகட்டின் நிறுத்திய பானனைச்
சிந்தித் தெழுப்பவே சிவனவ னாமே.
விளக்கம்:
நாசியின் மூலம் தொப்புள் இருக்கும் வயிறு வரை உள்ளிழுத்த மூச்சுக்காற்றை பாடல் #731 இல் கூறிய மந்திரத்தை இறைவனை நினைத்து தியானித்துக் கொண்டே மேலே எடுத்துச் சென்று இரண்டு புருவங்களுக்கு மத்தியில் நிறுத்தி வைத்துவிட்டு மூலாதாரத்திலுள்ள மூலாக்கினியை இறைவனை சிந்தித்துக் கொண்டே சுழுமுனை நாடியின் வழியாக மேலே எடுத்துச் சென்று இரண்டு புருவங்களுக்கு மத்தியில் நிறுத்தி வைத்த காற்றோடு சேர்த்து சகஸ்ரதளத்திலுள்ள ஆயிரம் இதழ்கொண்ட தாமரை மலரோடு கலக்கும் சாதகன் சிவனாவான்.
கருத்து: மூச்சுக்காற்றையும் மூலாக்கினியையும் சகஸ்ரதளத்தில் இருக்கும் இறைவனோடு கலந்து அகயோகம் செய்யும் சாதகன் சிவனாவான்.