பாடல் #585: மூன்றாம் தந்திரம் – 6. பிரத்தியாகாரம் (வெளியே செல்லும் மனதை உள்ளே ஒருநிலைப்படுத்திப் பழகுதல்)
ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்
பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக்
கரைத்துணர் வுன்னல் கரைதல்உள் நோக்கல்
பிரத்தியா காரப் பெருமைய தாமே.
விளக்கம்:
பிரத்தியாகாரத்தின் மூலம் மிகவும் கடினத்துடன் மனதை ஒருநிலைப்படுத்தி கர்மாவினால் உண்டான உடலின் தொடக்கத்தையும் ஆன்மாவின் அறிவையும் பிரித்துப் பார்க்கும் திறனை அடைவதும், தனித்தனியாகப் பார்க்கும் பல இறை உருவங்களை மெல்ல மறந்து அறிவு வடிவாகிய ஒரே இறைவனை உணர்வதும் அந்த உணர்வினால் இறைவனின் மேல் அன்பு அதிகமாவதும் அவ்வாறு அதிகமாகிய அன்பினால் இறைவனை எப்பொதும் மறக்காமல் இருப்பதும் ஆகிய இவையே பிரத்தியாகாரத்தால் அடையும் பெரும் பயன்களாம்.