பாடல் #497: இரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவவர்க்கம் (மூன்று விதமான உயிர்கள்)
சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர்
அவமாகாச் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார்
பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர்
நவமான தத்துவம் நாடிக்கண் டாரே.
விளக்கம்:
ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி என்னும் ஐந்து வலிமை மிகுந்த மலங்களை வென்று தாமே சிவமாகி சித்தர்கள் சாயுச்சியம் என்னும் பேரின்பப் பெருவாழ்வு பெற்று அதிலேயே என்றும் திளைத்து இருப்பார்கள். இவர்கள் இறவாத நிலை பெற்றதால் எப்போதும் பிறவி இல்லாத நிலையைப் பெற்று பசு பாசம் ஆகிய இரண்டும் நீங்கி பதியாக இருக்கும் ஒன்பது வகை தத்துவங்களை தமது தவத்தினால் உணர்ந்து அடைந்தார்கள்.
பதி பசு பாசம் விளக்கம்:
பதி என்பது இறைவனின் பேரான்மா. பசு என்பது இறைவனின் பேரான்மாவிலிருந்து பிரிந்து வந்து உலகங்களில் பிறந்த ஜீவ ஆன்மா. பாசம் என்பது பேரான்மாவுடம் ஜீவ ஆன்மா சேராதவாறு பிரித்து ஐந்து வகை மலங்களால் கட்டி இருப்பது. எப்போது பசுவாகிய ஜீவ ஆன்மா தனது பாசமாகிய மலங்களை அறுத்துக் கொண்டு பதியாகிய பரமாத்மாவை சென்று அடைகிறதோ அப்போது அது முக்தியைப் பெற்று இனி பிறவி இல்லாத நிலையை அடைகிறது.
ஒன்பது தத்துவ விளக்கம்:
உலகம் உருவாகுவதற்கும் உலக தொழில்கள் நடைபெறுவதற்கு காரணமாய் இருப்பவை ஒன்பது தத்துவங்களாகும். இந்த ஒன்பது தத்துவங்களையும் சித்தர்கள் தமது தவத்தினால் தமக்குள் கண்டு உணர்பவர்கள்.
- சிவம் – அசையா சக்தி
- சக்தி – அசையும் சக்தி
- ஒலி – சத்தம்
- ஒளி – வெளிச்சம்
- சதாசிவம் – அருளல்
- மகேசுவரன் – மறைத்தல்
- உருத்திரன் – அழித்தல்
- திருமால் – காத்தல்
- பிரம்மன் – படைத்தல்