பாடல் #440: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)
மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்
உண்ணின்ற யோனிகள் எல்லாம் ஒருவனே
கண்ணொன்று தான்பல காணும் தனைக்காணா
அண்ணலும் அவ்வண்ணமே ஆகிநின் றானே.
விளக்கம்:
உயிர்களுக்கு நல்ல முறையில் பயன்படும் பல்வேறு விதமான பாத்திரங்களை குயவன் செய்தாலும் அனைத்தையும் ஒரே விதமான களிமண்ணில் இருந்து தான் செய்கின்றான். அதுபோலவே உலகத்தில் பல்வேறு உருவங்களில் பல பிறவிகள் எடுத்தாலும் அனைத்து பிறவிகளிலும் ஆத்மாவாக இறைவன் ஒருவனே இருக்கின்றான். உயிர்களின் கண்கள் இரண்டாக இருந்தாலும் அவை ஒரேவிதமான காட்சிகளைக் கண்டாலும் தமது உருவத்தை அவற்றால் காண முடியாது. அதுபோலத்தான் இறைவனும் ஒவ்வொரு உயிரின் உள்ளத்துக்குள் இருந்து உயிர்களுக்கு அனைத்தையும் உணர வைத்தாலும் தம்மையே உணர முடியாதவனாக இருக்கின்றான்.
உட்கருத்து: அனைத்தையும் தமது கண்களால் பார்க்கும் உயிர்கள் தமது கண்களின் பிம்பத்தை கண்ணாடியில் காண முடியுமே தவிர தமது கண்களால் தமது கண்களையே காண முடியாது. அதுபோலவே மாயையால் மறைந்திருக்கும் இறைவன் உள்ளத்துக்குள்ளேயே இருந்து அனைத்தையும் உணர்த்தினாலும் அவனை மட்டும் உணர முடியாமல் இருக்கும்படி உயிர்களை மாயையால் மறைத்து வைத்திருக்கின்றான்.