பாடல் #439: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)
ஒருங்கிய பாசத்துள் உத்தம சித்தன்
இருங்கரை மேலிருந் தின்புற நாடி
வருங்கரை ஓரா வகையினிற் கங்கை
அருங்கரை பேணா தழுக்கது வாமே.
விளக்கம்:
மாயையால் உலகப் பற்றுக்களில் சிக்கிக் கொண்ட உயிர்கள் அந்த உலகப் பற்றுக்களின் மேல் வைத்திருக்கும் பாசத்திலேயே மூழ்கிக் கொண்டு தமது உள்ளத்துக்குள் உத்தமனாக வீற்றிருக்கும் இறைவனை உணர்ந்து அவன் அருளிய அமிர்தத்தை அருந்தி பேரின்பத்தில் திளைக்காமல் இருப்பது எப்படி இருக்கின்றதென்றால் கங்கையின் புனித நீரில் மூழ்கித் தமது பாவ அழுக்குகளைப் போக்கிக் கொள்ள முயற்சி செய்யாமல் கரையிலேயே நின்று பார்த்துக் கொண்டிருப்பதைப் போல இருக்கின்றது.
உட்கருத்து: கங்கையில் மூழ்கி பாவத்தைத் தீர்த்துக்கொள்ள முடிந்த போதும் அதைச் செய்யாமல் கரையிலேயே நின்று பார்ப்பது போல தமக்குள்ளேயே இறைவனை உணர்ந்து பேரின்பத்தைப் பெற முடிந்த போதும் அதைச் செய்யாமல் உலகச் சிற்றின்பங்களிலேயே திளைத்து இருப்பதைத்தான் உயிர்கள் விரும்புகின்றன.