பாடல் #370: இரண்டாம் தந்திரம் – 6. சக்கரப் பேறு (சக்கரத்தின் தத்துவம்)
தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்
தக்கன்றன் வேள்வியில் தாமோ தரன்தானும்
சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட
அக்கி உமிழ்ந்தது வாயுக் கரத்திலே.
விளக்கம்:
அறியாமையால் இறைவனை அழிக்க தக்கன் செய்த பெரிய வேள்வியை இறைவனின் அவதாரமான வீரபத்திரர் அழித்துத் தகர்த்தார். அப்போது வந்திருந்த திருமால் பிறை சந்திரனைச் சூடியிருக்கும் வீரபத்திரர் இறைவனின் அவதாரம் என்பதை உணராமல் வேள்வியை முறையின்றி அழித்துவிட்டதாக எண்ணி சக்கராயுதத்தை வீரபத்திரரின் பிறை சூடிய தலையை நோக்கி ஏவினான். அதைப் பார்த்த வீரபத்திரர் தமது கண்களில் நெருப்பு உமிழ அந்தச் சக்கரத்தைப் பார்த்து வாயிலிந்து ஒரு உக்கிர மிரட்டல் விட சக்கரம் வலுவிழந்து கீழே விழுந்தது.
குறிப்பு: பாடல் #369ல் உள்ளபடி தனது ஆற்றலின் ஒரு பகுதியாக இருந்த சக்கரமும் அதன் சக்தியையும் திருமாலுக்கு கொடுத்தாலும் சக்கரமும் அதன் சக்தியாகவும் இருப்பவர் இறைவனே ஆகையால் இறைவனின் அவதாரமாய் இருந்த வீரபத்திரரின் கட்டளைக்கிணங்க சக்கரம் வலுவிழந்து கீழே விழுந்தது.