இரண்டாம் தந்திரம் முன்னுரை
இரண்டாம் தந்திரத்தில் வரும் பாடல்கள் இறைவனின் நடத்திய திருவிளையாடல் புராண கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் பற்றி கூறுவது போல் இருந்தாலும் அனைத்து பாடல்களும் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் தத்துவங்களுக்கான விளக்கங்களை கூறுகின்றது. தத்துவம் என்பது தத்- துவம் தத் என்றால் உள்ளது என்றும் துவம் என்றால் தன்மை என்றும் பொருள், உள்ளது தன்மை அதாவது உண்மைத்தன்மை என்று பொருள். முதல் தலைப்பு அகத்தியம் இத்தலைப்பில் அகத்தியரின் தத்துவத்தை கூறுகிறார்.
பாடல் #337: இரண்டாம் தந்திரம் – 1. அகத்தியம் (அகம் + இயம்= அகத்தியம். உள்ளேயிருக்கும் ஒலி)
நடுவுநில் லாதிவ் வுலகம் சரிந்து
கெடுநின்ற தெம்பெரு மானென்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்திய நீபோய்
முடுகிய வையத்து முன்னிரென் றானே.
விளக்கம்:
இறைவனும் இறைவியும் திருமணம் செய்த போது அதைக் காண வேண்டும் என்ற ஆசையில் உலகத்திலுள்ள அனைத்து முனிவர்களும் யோகிகளும் சித்தர்களும் தேவர்களும் திருக்கயிலாயத்தில் வந்து சேர்ந்தனர். அதனால் அதுவரை சரிசமமாக நின்ற வடக்கு நிலங்களும் தெற்கு நிலங்களும் அதிக பளுவால் மாறி வடக்கு நிலங்கள் தாழ்ந்தும் தெற்கு நிலங்கள் உயர்ந்தும் நின்றது. உலகத்திற்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து தேவர்கள் இறைவனிடம் சென்று எம்பெருமானே இப்படி உலகம் சமம் இல்லாமல் கெட்டு நிற்கின்றதே இதைக் காப்பாற்றுங்கள் என்று முறையிட்டனர். சிவபெருமான் அகத்தியரைப் பார்த்து நீ சென்று உயர்ந்து நிற்கும் தெற்கு நிலங்களின் மேல் நின்று இரு என்று கூறினார். அதைக்கேட்டு அகத்தியரும் தென்னாடு சென்று பொதிகை மலையில் நிற்க தெற்கு நிலங்கள் சமம் பெற்றது.
உள்விளக்கம்:
உடலும் உயிரும் சேர்ந்து பிறந்த போது அது வளர வளர அதற்கு சிறிது சிறிதாக ஆசைகள் கோபம் காமம் என்று பல குணங்கள் சேரும் போது உடலோடு இருக்கும் உயிர் சரிசம நிலை இல்லாமல் கெட்டு அழிய ஆரம்பிக்கின்றது. அப்போது உயிர் தமக்கு ஆபத்து இறைவா என்னை காப்பாற்று என்று வணங்க உடம்பில் உயிர் தங்குவதற்கும் சாப்பிடும் உணவு செரிப்பதற்கும் அக்னியை வைத்து இருக்கும் பேரருளாளன் எம்பெருமான் ஈசன் உடம்பில் உள்ள அக்னியை கொண்டு எப்பொழுதும் அந்த அக்னி அழியாமல் இருக்க ஒலியை வைத்து அந்த அக்னியை வளர்த்துக்கொண்டே இருக்கின்றான். இந்த உடம்பு எப்பொழுதும் அழியாமல் இருக்க ஒலியால் குண்டலியில் உள்ள அக்னியை விரைவாக வளர்த்து தலையின் உச்சிக்கு கொண்டு சென்றால் அழியாமல் வைத்திருக்கலாம் என்று அருளுகிறார்.
ஒலி என்பதற்க்கான விளக்கம்:
மனிதனின் முன் மூளைப்பகுதியில் உள்ள நாளமில்லாச் சுரப்பி என் பெயர் பிட்யூடரி கிளாண்ட். பின் மூளையில் உள்ள நாளமில்லாச் சுரப்பு என் பெயர் பினியல் கிளாண்ட் இவை இரண்டும் வெவ்வேறு வகையில் வேலை செய்கின்றன. தெளிவான விளக்கங்கள் முன் மூளையிலும் அதனுடைய கருத்துக்கள் பின் மூளையிலும் பதிவு பெறுகின்றன. அவ்வகையான கருத்துக்களில் முதிர்ச்சியால் மூளையில் ஒரு வகை அதிர்வு (ஸ்பந்த உணர்வு) ஏற்பட்டு முன்மூளை அதிர்வு பின் நோக்கிச் செல்லும் பின் மூலையிலிருந்து அதிர்வு முன்மூளை நோக்கி செல்லும் இவை இரண்டும் சிரசின் உச்சியில் உரசுவதில் ஒலி உண்டாகும் இவ்விதமான அதிர்வு தலை முழுவதும் பரவி கவிழ்ந்து இருக்கும் சகஸ்ரதளத்தை நிமிர்ந்த சகஸ்ரதளமாக மாற்றும் இதுவே அகத்தியம்.
அருமை.