பாடல் #270: முதல் தந்திரம் – 18. அன்புடைமை (அன்பு செலுத்தும் முறை)
அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்துஇருந் தாரே.
விளக்கம்:
அன்பு என்று அழைக்கப்படுகின்ற உணர்வும் சிவம் என்று அழைக்கப்படுகின்ற இறைவனும் இரண்டு வேறு வேறு என்று கூறுகின்றவர்கள் உண்மை ஞானம் இல்லாத அறிவில்லாதவர்கள். அசையும் பொருள் அசையா பொருள் ஓர் அறிவு முதல் ஆறறிவு வரை உள்ள அனைத்து உயிர்கள் மீதும் செலுத்தப்படும் எதிர்பார்ப்பில்லாத தூய்மையான அன்பு தான் சிவம் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. இறைவனது திருவருளால் தமக்குள்ளும் பிறருக்குள்ளும் இருந்து வெளிப்படும் தூய்மையான அன்பு தான் சிவம் என்பதை அறிந்து உணர்ந்த பின் அந்த அறிவு ஞானமே தூய்மையான அன்பே சிவமாக அவருடைய உள்ளத்தில் அமர்ந்து இருப்பார்.
மிகவும் அழகான தெளிவு ஐயா சிவாயநம