பாடல் #1732: ஏழாம் தந்திரம் – 4. சதாசிவ லிங்கம் (அருவுருவமாக இருக்கின்ற பரம்பொருளின் வடிவம்)
ஆகின்ற சத்தியி னுள்ளே கலைநிலை
யாகின்ற சத்தியி னுள்ளே கதிரெழ
வாகின்ற சத்தியி னுள்ளே யமர்ந்தபி
னாகின்ற சத்தியு ளத்திசை பத்தே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
ஆகினற சததியி னுளளெ கலைநிலை
யாகினற சததியி னுளளெ கதிரெழ
வாகினற சததியி னுளளெ யமரநதபி
னாகினற சததியு ளததிசை பததெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
ஆகின்ற சத்தியின் உள்ளே கலை நிலை
ஆகின்ற சத்தியின் உள்ளே கதிர் எழ
ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்த பின்
ஆகின்ற சத்தி உள் அத் திசை பத்தே.
பதப்பொருள்:
ஆகின்ற (அசையாத சக்தியாகிய சதாசிவப் பரம்பொருளில் எண்ண அலைகள் உருவாகின்ற போது அந்த அசைவினால் வெளிப்படுகின்ற) சத்தியின் (அசையும் சக்திக்கு) உள்ளே (உள்ளே) கலை (உலக இயக்கத்திற்கு தேவையான ஐந்து விதமான கலைகளாகிய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தும்) நிலை (நிலை பெறும்)
ஆகின்ற (சதாசிவப் பரம்பொருளிலிருந்து வெளிப்பட்ட) சத்தியின் (சக்தியின்) உள்ளே (உள்ளே) கதிர் (வெளிச்சமாகிய சக்தி) எழ (எழுந்து வரும் போது)
ஆகின்ற (சதாசிவப் பரம்பொருளிலிருந்து வெளிப்பட்ட) சத்தியின் (சக்தியின்) உள்ளே (உள்ளே) அமர்ந்த (சத்தமாகிய சிவமும் அமர்ந்த) பின் (பிறகு)
ஆகின்ற (சதாசிவப் பரம்பொருளிலிருந்து வெளிப்பட்ட) சத்தி (சக்திக்கு) உள் (உள்) அத் (அண்ட சராசரங்களும்) திசை (திசைகள்) பத்தே (பத்தும் அடங்கி இருக்கும்).
விளக்கம்:
அசையாத சக்தியாகிய சதாசிவப் பரம்பொருளில் எண்ண அலைகள் உருவாகின்ற போது அந்த அசைவினால் வெளிப்படுகின்ற அசையும் சக்திக்கு உள்ளே உலக இயக்கத்திற்கு தேவையான ஐந்து விதமான கலைகளாகிய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தும் நிலை பெறும். அதற்குள்ளிருந்து வெளிச்சமாகிய சக்தி எழுந்து வரும் போது அதனுள் சத்தமாகிய சிவமும் அமரும். அதற்குள்ளேயே அண்ட சராசரங்களும் அதிலிருக்கும் பத்து திசைகளும் அடங்கி இருக்கும்.