பாடல் #1669: ஆறாம் தந்திரம் – 11. ஞான வேடம் (உண்மை ஞானம் உள்ளவர்களின் வேடம்)
புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை
நன்ஞானத் தோர்வேடம் பூணாரருள் நண்ணித்
துன்ஞானத் தோர்சமையத் துரியத் துளோர்
பின்ஞானத் துளோரென்று பேசகி லாரே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
புனஞானத தொரவெடம பூணடும பயனிலலை
நனஞானத தொரவெடம பூணாரருள நணணித
துனஞானத தொரசமையத துரியத துளொர
பினஞானத துளொரெனறு பெசகி லாரெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
புன் ஞானத்தோர் வேடம் பூண்டும் பயன் இல்லை
நல் ஞானத்தோர் வேடம் பூணார் அருள் நண்ணி
துன் ஞானத்தோர் சமைய துரியத்து உளோர்
பின் ஞானத்து உளோர் என்று பேச கிலாரே.
பதப்பொருள்:
புன் (இழிவான) ஞானத்தோர் (ஞானத்தை கொண்டவர்கள்) வேடம் (உண்மை ஞானம் கொண்டவர்கள் போல பொய்யாக வேடம்) பூண்டும் (அணிந்தாலும்) பயன் (அதனால் அவர்களுக்கு ஒரு பயனும்) இல்லை (இல்லை)
நல் (நன்மையான) ஞானத்தோர் (ஞானத்தை பெற்றவர்கள்) வேடம் (வேடம்) பூணார் (அணிந்து கொள்வதை விரும்பாமல்) அருள் (இறைவனின் திருவருள்) நண்ணி (கிடைப்பதையே விரும்பி இருப்பார்கள்)
துன் (தீமையான) ஞானத்தோர் (ஞானத்தை கொண்டவர்கள்) சமைய (தத்தமது சமயங்களின்) துரியத்து (கொள்கைகளின் மேல் நீங்காத பற்று) உளோர் (உள்ளவர்கள் ஆதலால் தங்களின் சமயமே பெரியது என்று பேசி தவறான வழியில் செல்வார்கள்)
பின் (அதனால் பிறகு) ஞானத்து (உண்மை ஞானத்தை) உளோர் (தாம் கொண்டவர்கள்) என்று (என்று) பேச (பேசுவது) கிலாரே (அவர்களால் முடியாது).
விளக்கம்:
இழிவான ஞானத்தை கொண்டவர்கள் உண்மை ஞானம் கொண்டவர்கள் போல பொய்யாக வேடம் அணிந்தாலும் அதனால் அவர்களுக்கு ஒரு பயனும் இல்லை. நன்மையான ஞானத்தை பெற்றவர்கள் வேடம் அணிந்து கொள்வதை விரும்பாமல் இறைவனின் திருவருள் கிடைப்பதையே விரும்பி இருப்பார்கள். தீமையான ஞானத்தை கொண்டவர்கள் தத்தமது சமயங்களின் கொள்கைகளின் மேல் நீங்காத பற்று உள்ளவர்கள் தங்களின் சமயமே பெரியது என்று பேசி தவறான வழியில் செல்வார்கள். அதனால் பிறகு உண்மை ஞானத்தை தாம் கொண்டவர்கள் என்று அவர்களால் பேச முடியாது.