பாடல் #1668: ஆறாம் தந்திரம் – 11. ஞான வேடம் (உண்மை ஞானம் உள்ளவர்களின் வேடம்)
ஞானமில் லார்வேடம் பூண்டு நரகத்தர்
ஞானமுள் ளார்வேட மின்றெனில் நன்முத்தர்
ஞானமு ளவாக வேண்டுவோர் நக்கன்பால்
ஞானமுள வேட நண்ணிநிற் பாரே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
ஞானமில லாரவெடம பூணடு நரகததர
ஞானமுள ளாரவெட மினறெனில நனமுததர
ஞானமு ளவாக வெணடுவொர நககனபால
ஞானமுள வெட நணணிநிற பாரெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
ஞானம் இல்லார் வேடம் பூண்டு நரகத்தர்
ஞானம் உள்ளார் வேடமின்று எனில் நல் முத்தர்
ஞானம் உள ஆக வேண்டுவோர் நக்கன் பால்
ஞானம் உள வேடம் நண்ணி நிற்பாரே.
பதப்பொருள்:
ஞானம் (உண்மை ஞானம்) இல்லார் (இல்லாதவர்கள்) வேடம் (பொய்யாக வேடம்) பூண்டு (அணிந்தால்) நரகத்தர் (நரகத்திற்கே செல்வார்கள்)
ஞானம் (உண்மை ஞானத்தை) உள்ளார் (உடையவர்கள்) வேடமின்று (வேடம் அணிந்து இல்லாமல்) எனில் (இருந்தாலும்) நல் (நன்மையான) முத்தர் (முக்தியை பெறுவார்கள்)
ஞானம் (உண்மை ஞானம்) உள (தமக்குள்) ஆக (உருவாக) வேண்டுவோர் (வேண்டும் என்று விரும்புபவர்கள்) நக்கன் (மகா நிர்வாண நிலையில் இருக்கின்ற இறைவனின்) பால் (அருகாமையை விரும்பி)
ஞானம் (உண்மை ஞானத்தை பெறுவதற்கு) உள (உள்ள) வேடம் (வேடத்தை) நண்ணி (தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று வேண்டி) நிற்பாரே (நிற்பார்கள்).
விளக்கம்:
உண்மை ஞானம் இல்லாதவர்கள் பொய்யாக வேடம் அணிந்தால் நரகத்திற்கே செல்வார்கள். உண்மை ஞானத்தை உடையவர்கள் வேடம் அணிந்து இல்லாமல் இருந்தாலும் நன்மையான முக்தியை பெறுவார்கள். உண்மை ஞானம் தமக்குள் உருவாக வேண்டும் என்று விரும்புபவர்கள் மகா நிர்வாண நிலையில் இருக்கின்ற இறைவனின் அருகாமையை விரும்பி உண்மை ஞானத்தை பெறுவதற்கு உள்ள வேடத்தை தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று வேண்டி நிற்பார்கள்.