பாடல் #1612: ஆறாம் தந்திரம் – 3. ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)
முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றின்பால்
வைத்த கலைகாலை நான்மடங் கான்மாற்றி
யுய்த்த தவத்தாந்தத் தொண்குரு பாதத்தே
பெத்த மறுத்தோர் பிறந்திற வாரே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
முததிரை மூனறின முடிநதது மூனறினபால
வைதத கலைகாலை நானமடங கானமாறறி
யுயதத தவததாநதத தொணகுரு பாதததெ
பெதத மறுததொர பிறநதிற வாரெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றின் பால்
வைத்த கலை காலை நான் மடங்கால் மாற்றி
உய்த்த தவத்து அந்தத்து ஒண் குரு பாதத்தே
பெத்தம் அறுத்தோர் பிறந்து இறவாரே.
பதப்பொருள்:
முத் (மூன்று) திரை (திரைகளாகிய மாயையால் மூடியிருக்கின்ற பார்க்கின்றவன், பார்க்கும் ஞானம், பார்க்கப்படும் பொருள்) மூன்றின் (ஆகிய மூன்றையும் மூடியிருக்கின்ற) முடிந்தது (மாயை முடிந்து விடுவதற்கு) மூன்றின் (இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளின்) பால் (மூலம்)
வைத்த (இறைவன் பிறக்கும் போதே இயல்பாக வைத்து அருளிய) கலை (மூச்சுக்காற்றின்) காலை (போக்குவரத்தை இயல்பான கீழ் நிலையில் இருந்து) நான் (நான்கு) மடங்கால் (விரற்கடை / அங்குலம் அளவிற்கு) மாற்றி (மேல் நோக்கி மாற்றி)
உய்த்த (உச்சியிலிருக்கும் சகஸ்ரரதளத்திற்கு கொண்டு சென்று சேர்த்து) தவத்து (செய்கின்ற தவத்தில்) அந்தத்து (முழுமை பெற்ற நிலையில்) ஒண் (சாதகரோடு ஒன்றி இருக்கின்ற) குரு (குருநாதராகிய இறைவனின்) பாதத்தே (திருவடிகளைப் பெற்று)
பெத்தம் (பிறவிக்கு காரணமாகிய மூன்று மலங்களையும் அதை சார்ந்த அனைத்து பற்றுக்களையும்) அறுத்தோர் (அறுத்து விட்டவர்கள்) பிறந்து (இனி பிறக்கவோ) இறவாரே (இறக்கவோ மாட்டார்கள்).
விளக்கம்:
மூன்று திரைகளாகிய மாயையால் மூடியிருக்கின்ற பார்க்கின்றவன், பார்க்கும் ஞானம், பார்க்கப்படும் பொருள் ஆகிய மூன்றையும் மூடியிருக்கின்ற மாயை முடிந்து விடுவதற்கு இடகலை பிங்கலை சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளின் மூலம் இறைவன் பிறக்கும் போதே இயல்பாக வைத்து அருளிய மூச்சுக்காற்றின் போக்குவரத்தை இயல்பான கீழ் நிலையில் இருந்து நான்கு விரற்கடை அளவிற்கு மேல் நோக்கி மாற்றி உச்சியிலிருக்கும் சகஸ்ரரதளத்திற்கு கொண்டு சென்று சேர்த்து செய்கின்ற தவத்தில் முழுமை பெற்ற நிலையில் சாதகரோடு ஒன்றி இருக்கின்ற குருநாதராகிய இறைவனின் திருவடிகளைப் பெற்று பிறவிக்கு காரணமாகிய மூன்று மலங்களையும் அதை சார்ந்த அனைத்து பற்றுக்களையும் அறுத்து விட்டவர்கள் இனி பிறக்கவோ இறக்கவோ மாட்டார்கள்.
பாடல் 1613 முதல் கீழ்
திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் அனைத்தும் பதிவு செய்யவும் வணக்கம்.
வணக்கம்