பாடல் #1611: ஆறாம் தந்திரம் – 3. ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)
மோனங்கை வந்தோர்க்கு முத்தியுங் கைகூடு
மோனங்கை வந்தோர்க்குச் சித்தியு முன்னிற்கு
மோனங்கை வந்தூமை யாமொழி முற்றுங்காண்
மோனங்கை வந்தைங் கருமமு முன்னுமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
மொனஙகை வநதொரககு முததியுங கைகூடு
மொனஙகை வநதொரககுச சிததியு முனனிறகு
மொனஙகை வநதூமை யாமொழி முறறுஙகாண
மொனஙகை வநதைங கருமமு முனனுமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
மோனம் கை வந்தோர்க்கு முத்தியும் கை கூடும்
மோனம் கை வந்தோர்க்கு சித்தியும் உன் நிற்கும்
மோனம் கை வந்து ஊமையாம் மொழி முற்றும் காண்
மோனம் கை வந்து ஐங் கருமமும் உன்னுமே.
பதப்பொருள்:
மோனம் (பேச்சுகளும் எண்ணங்களும் அற்ற மோன நிலை) கை (கைகூடும் படி) வந்தோர்க்கு (அடைந்தவர்களுக்கு) முத்தியும் (முக்தி நிலையும்) கை (கை) கூடும் (கூடும்)
மோனம் (பேச்சுகளும் எண்ணங்களும் அற்ற மோன நிலை) கை (கைகூடும் படி) வந்தோர்க்கு (அடைந்தவர்களுக்கு) சித்தியும் (அனைத்து விதமான சித்திகளும்) உன் (அவர்களுக்குள்) நிற்கும் (நிலைத்து நிற்கும்)
மோனம் (பேச்சுகளும் எண்ணங்களும் அற்ற மோன நிலை) கை (கைகூடும் படி) வந்து (அடைந்த பிறகு) ஊமையாம் (உடல் அசைவுகளால்) மொழி (பேசுகின்ற மொழி) முற்றும் (முழுவதும் நீங்கி விடுவதை) காண் (காணலாம்)
மோனம் (பேச்சுகளும் எண்ணங்களும் அற்ற மோன நிலை) கை (கைகூடும் படி) வந்து (அடைந்த பிறகு) ஐங் (உலகத்தில் இறைவன் செய்கின்ற ஐந்து விதமான) கருமமும் (தொழில்களையும்) உன்னுமே (தமக்குள்ளேயே அவர்களால் உணர முடியும்).
விளக்கம்:
பேச்சுகளும் எண்ணங்களும் அற்ற மோன நிலை கைகூடும் படி அடைந்தவர்களுக்கு முக்தி நிலையும் கை கூடும். அனைத்து விதமான சித்திகளும் அவர்களுக்குள் நிலைத்து நிற்கும். உடல் அசைவுகளால் பேசுகின்ற மொழி கூட அவர்களை விட்டு முழுவதும் நீங்கி விடுவதை அவர்கள் காணலாம். உலகத்தில் இறைவன் செய்கின்ற படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் ஆகிய ஐந்து விதமான தொழில்களையும் தமக்குள்ளேயே அவர்களால் உணர முடியும்.