பாடல் #1609: ஆறாம் தந்திரம் – 3. ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)
முன்னை யறிவறி யாதவம் மூடர்போற்
பின்னை யறிவறி யாமையைப் பேதித்தான்
றன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத்
தென்னை யறிவித் திருந்தன னந்தியே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
முனனை யறிவறி யாதவம மூடரபொற
பினனை யறிவறி யாமையைப பெதிததான
றனனை யறியப பரனாககித தறசிவத
தெனனை யறிவித திருநதன னநதியெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
முன்னை அறிவு அறியாத அம் மூடர் போல்
பின்னை அறிவு அறியாமையை பேதித்தான்
தன்னை அறிய பரன் ஆக்கி தன் சிவத்து
என்னை அறிவித்து இருந்தனன் நந்தியே.
பதப்பொருள்:
முன்னை (இறைவனே குருவாக வருவதற்கு முன்பு) அறிவு (அவனை அறிகின்ற அறிவை) அறியாத (அறியாமல் பந்த பாசங்களில் சிக்கிக் கொண்டு மாயையிலேயே உழன்று கொண்டு இருக்கின்ற) அம் (இந்த உலகத்து) மூடர் (முட்டாள்களைப்) போல் (போலவே யானும் இருந்தேன்)
பின்னை (என்னை தடுத்து ஆட்கொள்வதற்காக இறைவனே குருவாக வந்த பிறகு) அறிவு (அவனை அறிந்து இருக்கின்ற ஞானத்தையும்) அறியாமையை (அவனை அறியாமல் இருக்கின்ற அறியாமையையும்) பேதித்தான் (பிரித்து காட்டி அருளினான்)
தன்னை (அதன் பிறகு எனக்குள் இருக்கும் இறைவனை) அறிய (அறிந்து கொள்ளும் படி செய்து) பரன் (அவரைப் போலவே என்னையும் பரம்பொருளாக) ஆக்கி (ஆக்கி) தன் (தமது) சிவத்து (சிவத் தன்மையை)
என்னை (யானும்) அறிவித்து (அறிந்து கொள்ளும் படி செய்து) இருந்தனன் (என்னுடன் வீற்றிருந்தார்) நந்தியே (குருநாதராக வந்த இறைவன்).
விளக்கம்:
இறைவனே குருவாக வருவதற்கு முன்பு அவனை அறிகின்ற அறிவை அறியாமல் பந்த பாசங்களில் சிக்கிக் கொண்டு மாயையிலேயே உழன்று கொண்டு இருக்கின்ற இந்த உலகத்து முட்டாள்களைப் போலவே யானும் இருந்தேன். என்னை தடுத்து ஆட்கொள்வதற்காக இறைவனே குருவாக வந்த பிறகு அவனை அறிந்து இருக்கின்ற ஞானத்தையும் அவனை அறியாமல் இருக்கின்ற அறியாமையையும் பிரித்து காட்டி அருளினான். அதன் பிறகு எனக்குள் இருக்கும் இறைவனை அறிந்து கொள்ளும் படி செய்து அவரைப் போலவே என்னையும் பரம்பொருளாக ஆக்கி தமது சிவத் தன்மையை யானும் அறிந்து கொள்ளும் படி செய்து என்னுடன் வீற்றிருந்தார் குருநாதராக வந்த இறைவன்.