பாடல் #1607: ஆறாம் தந்திரம் – 3. ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)
தானென் றவனென் றிரண்டாகுந் தத்துவந்
தானென் றவனென் றிரண்டுந் தனிற்கண்டு
தானென் றபூவை யவனடி சாத்தினால்
நானென் றவனென்கை நல்லதொன் றன்றே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
தானென றவனென றிரணடாகுந தததுவந
தானென றவனென றிரணடுந தனிறகணடு
தானென றபூவை யவனடி சாததினால
நானென றவனெனகை நலலதொன றனறெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
தான் என்று அவன் என்று இரண்டு ஆகும் தத்துவம்
தான் என்ற அவன் என்ற இரண்டும் தனில் கண்டு
தான் என்ற பூவை அவன் அடி சாத்தினால்
நான் என்று அவன் என்கை நல்லது ஒன்று அன்றே.
பதப்பொருள்:
தான் (தான்) என்று (என்று தனியாகவும்) அவன் (இறைவன்) என்று (என்று தனியாகவும்) இரண்டு (இரண்டு விதம்) ஆகும் (ஆக பிரித்து வைத்து பார்க்கின்ற) தத்துவம் (தத்துவமானது)
தான் (தான்) என்ற (என்று எண்ணப்படுகின்ற பொருள்) அவன் (இறைவன்) என்ற (என்று எண்ணப்படுகின்ற பொருள்) இரண்டும் (ஆகிய இரண்டையும்) தனில் (தமக்குள்ளேயே) கண்டு (கண்டு உணர்ந்து)
தான் (தான்) என்ற (என்று எண்ணப்படுகின்ற பொருளாகிய ஆன்மாவை) பூவை (ஒரு பூவாக பாவித்து) அவன் (தமக்குள் இருக்கின்ற இறைவனின்) அடி (திருவடிகளில்) சாத்தினால் (அதை சாத்தி வணங்கித் தொழுதால்)
நான் (அடியவர் நான்) என்று (என்று எதை எண்ணுகின்றாரோ அதை) அவன் (இறைவன்) என்கை (என்று உணர்வதே) நல்லது (நல்லதான) ஒன்று (ஒன்றாக) அன்றே (அன்றிலிருந்தே உணர்ந்து கொள்ளுவார்).
விளக்கம்:
தான் என்று தனியாகவும் இறைவன் என்று தனியாகவும் இரண்டு விதமாக பிரித்து வைத்து பார்க்கின்ற தத்துவமானது, தான் என்று எண்ணப்படுகின்ற பொருள் இறைவன் என்று எண்ணப்படுகின்ற பொருள் ஆகிய இரண்டையும் தமக்குள்ளேயே கண்டு உணர்ந்து, தான் என்று எண்ணப்படுகின்ற பொருளாகிய ஆன்மாவை ஒரு பூவாக பாவித்து தமக்குள் இருக்கின்ற இறைவனின் திருவடிகளில் அதை சாத்தி வணங்கித் தொழுதால், அடியவர் நான் என்று எதை எண்ணுகின்றாரோ அதை இறைவன் என்று உணர்வதே நல்லதான ஒன்றாக அன்றிலிருந்தே உணர்ந்து கொள்ளுவார்.