பாடல் #1606: ஆறாம் தந்திரம் – 3. ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)
ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நீங்கிடும்
ஞேயத்தில் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்
ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை யுற்றவ
ராயத்தி னின்ற வறிவறி வோரே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
ஞெயததெ நினறொரககு ஞானாதி நீஙகிடும
ஞெயததில ஞாதுரு ஞெயததில வீடாகும
ஞெயததின ஞெயததை ஞெயததை யுறறவ
ராயததி னினற வறிவறி வொரெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
ஞேயத்தே நின்றோர்க்கு ஞான ஆதி நீங்கிடும்
ஞேயத்தில் ஞாது உரு ஞேயத்தில் வீடு ஆகும்
ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை உற்றவர்
ஆயத்தின் நின்ற அறிவு அறிவோரே.
பதப்பொருள்:
ஞேயத்தே (ஞானத்தினால் பார்க்கப் படுகின்ற ஆன்மாவை சிவப் பரம்பொருளாக உணர்ந்து) நின்றோர்க்கு (நின்றவர்களுக்கு) ஞான (தாமே சிவம் என்பதை உணர்கின்ற ஞானத்தை) ஆதி (ஆராய்கின்ற அறிவு) நீங்கிடும் (நீங்கி விடும்)
ஞேயத்தில் (ஞானத்தினால் பார்க்கப் படுகின்ற ஆன்மாவில் சிவப் பரம்பொருளை) ஞாது (பார்க்கின்ற) உரு (உருவமே) ஞேயத்தில் (பார்க்கப்படுகின்ற பரம்பொருளில்) வீடு (முக்தி நிலை) ஆகும் (ஆகும்)
ஞேயத்தின் (ஞானத்தினால் பார்க்கப் படுகின்ற ஆன்மாவாக உள்ள சிவப் பரம்பொருளில்) ஞேயத்தை (பரம்பொருளாக இருக்கின்ற) ஞேயத்தை (பரமாத்மாவோடு) உற்றவர் (சேர்ந்து இருக்கின்ற)
ஆயத்தின் (அடியவர் கூட்டத்துடன்) நின்ற (தாமும் சேர்ந்து நிற்கின்ற) அறிவு (அறிவை) அறிவோரே (அவர்கள் அறிந்து கொள்ளுவார்கள்).
விளக்கம்:
ஞானத்தினால் பார்க்கப் படுகின்ற ஆன்மாவை சிவப் பரம்பொருளாக உணர்ந்து நின்றவர்களுக்கு தாமே சிவம் என்பதை உணர்கின்ற ஞானத்தை ஆராய்கின்ற அறிவு நீங்கி விடும். ஞானத்தினால் பார்க்கப் படுகின்ற ஆன்மாவில் சிவப் பரம்பொருளை பார்க்கின்ற உருவமே பார்க்கப்படுகின்ற பரம்பொருளில் முக்தி நிலை ஆகும். ஞானத்தினால் பார்க்கப் படுகின்ற ஆன்மாவாக உள்ள சிவப் பரம்பொருளில் பரம்பொருளாக இருக்கின்ற பரமாத்மாவோடு சேர்ந்து இருக்கின்ற அடியவர் கூட்டத்துடன் தாமும் சேர்ந்து நிற்கின்ற அறிவை அவர்கள் அறிந்து கொள்ளுவார்கள்.