பாடல் #1529: ஐந்தாம் தந்திரம் – 20. தீவிர தரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி அதி விரைவாக வருகின்ற தன்மை)
மாலை விளக்கும் மதியமு ஞாயிறுஞ்
சால விளக்குந் தனிச்சுட ரண்ணலும்
ஞாலம் விளக்கிய நாதனென் னுள்புகுந்
தூனை விளக்கி யுடனிருந் தானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
மாலை விளககு மதியமு ஞாயிறுஞ
சால விளககுந தனிசசுட ரணணலும
ஞாலம விளககிய நாதனென னுளபுகுந
தூனை விளககி யுடனிருந தானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
மாலை விளக்கும் மதியமும் ஞாயிறும்
சால விளக்கும் தனி சுடர் அண்ணலும்
ஞாலம் விளக்கிய நாதன் என் உள் புகுந்து
ஊனை விளக்கி உடன் இருந்தானே.
பதப்பொருள்:
மாலை (அந்தி சாயும் வேளையில் வெளிச்சத்திற்காக ஏற்றப்படுகின்ற) விளக்கும் (விளக்குகளில் இருந்து வருகின்ற ஒளியையும்) மதியமும் (இரவு நேரங்களில் நிலவில் இருந்து வருகின்ற ஒளியையும்) ஞாயிறும் (பகல் நேரங்களில் சூரியனில் இருந்து வருகின்ற ஒளியையும்)
சால (இறைவனை வணங்கும் பூஜைகளில் ஏற்றி வைக்கின்ற) விளக்கும் (தீபங்களில் இருந்து வருகின்ற ஒளியையும்) தனி (தனிப் பெரும்) சுடர் (சுடராக இருக்கின்ற) அண்ணலும் (இறைவனின் ஜோதி உருவமாகவே பார்த்து உணர்ந்தால்)
ஞாலம் (உலகத்தை) விளக்கிய (விளக்கி அருளுகின்ற) நாதன் (தலைவனாகிய இறைவன்) என் (எமது) உள் (உடலுக்குள்) புகுந்து (புகுந்து வந்து)
ஊனை (எமது உடலுக்குள் இருக்கின்ற உண்மை பொருளையும்) விளக்கி (விளக்கி யாம் அறியும் படி செய்து) உடன் (எம்முடன் எப்போதும்) இருந்தானே (இருப்பான்).
விளக்கம்:
அந்தி சாயும் வேளையில் வெளிச்சத்திற்காக ஏற்றப்படுகின்ற விளக்குகளில் இருந்து வருகின்ற ஒளியையும், இரவு நேரங்களில் நிலவில் இருந்து வருகின்ற ஒளியையும், பகல் நேரங்களில் சூரியனில் இருந்து வருகின்ற ஒளியையும், இறைவனை வணங்கும் பூஜைகளில் ஏற்றி வைக்கின்ற தீபங்களில் இருந்து வருகின்ற ஒளியையும், தனிப் பெரும் சுடராக இருக்கின்ற இறைவனின் ஜோதி உருவமாகவே சாதகர் பார்த்து உணர்ந்தால், உலகத்தை விளக்கி அருளுகின்ற தலைவனாகிய இறைவன் அவரது உடலுக்குள் புகுந்து வந்து, அவரது உடலுக்குள் இருக்கின்ற உண்மை பொருளையும் விளக்கி அவர் அறியும் படி செய்து அவருடன் எப்போதும் இருப்பான்.