பாடல் #1524

பாடல் #1524: ஐந்தாம் தந்திரம் – 19. தீவிரம் (அருள் சக்தி சாதகத்திற்கு ஏற்றபடி விரைவாக வருகின்ற தன்மை)

பிறப்பை யறுக்கும் பெருந்தவ நல்கு
மறப்பை யறுக்கும் வழிபட வைக்குங்
குறப்பெண் குவிமுலைக் கோமள வல்லி
சிறப்பொடு பூசனை செய்யநின் றாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பிறபபை யறுககும பெருநதவ நலகு
மறபபை யறுககும வழிபட வைககுங
குறபபெண குவிமுலைக கொமள வலலி
சிறபபொடு பூசனை செயயநின றாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பிறப்பை அறுக்கும் பெரும் தவம் நல்கும்
மறப்பை அறுக்கும் வழி பட வைக்கும்
குற பெண் குவி முலை கோமள வல்லி
சிறப்போடு பூசனை செய்ய நின்றாளே.

பதப்பொருள்:

பிறப்பை (இனிமேல் எடுக்க வேண்டிய அனைத்து பிறவிகளையும்) அறுக்கும் (அறுத்து விடக் கூடிய) பெரும் (மிகப் பெரும்) தவம் (தவத்தை) நல்கும் (அருளுபவளாகவும்)
மறப்பை (இறைவனிடமிருந்தே பிரிந்து வந்திருக்கின்றோம் என்பதை மறந்து விட்டு மாயையில் இருக்கின்ற நிலையை) அறுக்கும் (அறுக்கின்ற) வழி (வழியில்) பட (சாதகர்களை செல்ல) வைக்கும் (வைக்கின்றவளாகவும்)
குற (அதற்கு தேவையான அனைத்து ஞானங்களையும்) பெண் (அருளுகின்ற சக்தியாகவும்) குவி (குவிந்த) முலை (மார்பகங்களின் மூலம் அமிழ்தத்தை வழங்குபவளாகவும்) கோமள (அடியவர்களை தன் பால் ஈர்க்கின்ற பேரழகுடன்) வல்லி (என்றும் இளமையானவளாகவும் இருக்கின்ற இறைவியானவள்)
சிறப்போடு (சிறப்பு பொருந்தியவளாக) பூசனை (அவர்களை பூஜைகள்) செய்ய (செய்ய வைத்துக் கொண்டே) நின்றாளே (அருட் சக்தியாக எப்போதும் சேர்ந்தே நிற்கின்றாள்).

விளக்கம்:

இனிமேல் எடுக்க வேண்டிய அனைத்து பிறவிகளையும் அறுத்து விடக் கூடிய மிகப் பெரும் தவத்தை அருளுபவளாகவும் இறைவனிடமிருந்தே பிரிந்து வந்திருக்கின்றோம் என்பதை மறந்து விட்டு மாயையில் இருக்கின்ற நிலையை அறுக்கின்ற வழியில் சாதகர்களை செல்ல வைக்கின்றவளாகவும் அதற்கு தேவையான அனைத்து ஞானங்களையும் அருளுகின்ற சக்தியாகவும் குவிந்த மார்பகங்களின் மூலம் அமிழ்தத்தை வழங்குபவளாகவும் அடியவர்களை தன் பால் ஈர்க்கின்ற பேரழகுடன் என்றும் இளமையானவளாகவும் இருக்கின்ற இறைவியானவள் சிறப்பு பொருந்தியவளாக அவர்களை பூஜைகள் செய்ய வைத்துக் கொண்டே அருட் சக்தியாக எப்போதும் சேர்ந்தே நிற்கின்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.