பாடல் #1500: ஐந்தாம் தந்திரம் – 11. சற்புத்திர மார்க்கம் (இறைவனை உண்மையான தந்தையாக பாவித்து அவனை அடைகின்ற வழி முறை)
நின்று தொழுவன் கிடந்தெம் பிரான்றன்னை
யென்று தொழுவ னியற்பரஞ் சோதியைத்
துன்று மலர்தூவித் தொழுமின் றொழுந்தோறுஞ்
சென்று வெளிப்படுந் தேவர் பிரானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
நினறு தொழுவன கிடநதெம பிரானறனனை
யெனறு தொழுவ னியறபரஞ சொதியைத
துனறு மலரதூவித தொழுமின றொழுநதொறுஞ
செனறு வெளிபபடுந தெவர பிரானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
நின்று தொழுவன் கிடந்து எம் பிரான் தன்னை
என்றும் தொழுவன் இயற் பரஞ் சோதியை
துன்று மலர் தூவி தொழுமின் தொழும் தோறும்
சென்று வெளிப்படும் தேவர் பிரானே.
பதப்பொருள்:
நின்று (மனதை ஒருநிலைப் படுத்தி) தொழுவன் (தொழுகின்றேன்) கிடந்து (எதை செய்தாலும் அதை இறைவனை நினைத்தே செய்கின்றேன்) எம் (எம்) பிரான் (தந்தையாகிய) தன்னை (இறைவனை)
என்றும் (எப்போதும்) தொழுவன் (தொழுது கொண்டே இருக்கின்றேன்) இயற் (தானாகவே இருக்கின்ற) பரஞ் (பரம்பெரும்) சோதியை (சோதியாக இருக்கின்ற இறைவனை)
துன்று (மாசு இல்லாத) மலர் (மலர்களைத்) தூவி (தூவி) தொழுமின் (நீங்களும் தொழுங்கள்) தொழும் (அப்படி தொழுது கொண்டே) தோறும் (எப்போதும் இருக்கின்ற போது)
சென்று (நீங்கள் செய்கின்ற அனைத்திற்குள்ளும் சென்று) வெளிப்படும் (சோதியாக வெளிப்பட்டு அருள்வான்) தேவர் (தேவர்களுக்கும்) பிரானே (தந்தையாக இருக்கின்ற இறைவன்).
விளக்கம்:
எம் தந்தையாகிய இறைவனை மனதை ஒருநிலைப் படுத்தி தொழுகின்றேன் எதை செய்தாலும் அதை அவனை நினைத்தே செய்கின்றேன். தானாகவே இருக்கின்ற பரம்பெரும் சோதியாக இருக்கின்ற அந்த இறைவனை எப்போதும் தொழுது கொண்டே இருக்கின்றேன். உங்களுக்கும் தந்தையாகிய அந்த இறைவனை மாசு இல்லாத மலர்களைத் தூவி நீங்களும் தொழுங்கள் அப்படி தொழுது கொண்டே எப்போதும் இருக்கின்ற போது நீங்கள் செய்கின்ற அனைத்திற்குள்ளும் சென்று சோதியாக வெளிப்பட்டு அருள்வான் தேவர்களுக்கும் தந்தையாக இருக்கின்ற இறைவன்.