பாடல் #1499: ஐந்தாம் தந்திரம் – 11. சற்புத்திர மார்க்கம் (இறைவனை உண்மையான தந்தையாக பாவித்து அவனை அடைகின்ற வழி முறை)
உயர்ந்து பணிந்து முகந்துந் தழுவி
வியந்து மரனடிக் கைமுறை செய்யின்
பயந்தும் பிறவிப் பயனது வாகும்
பயந்தும் பரிக்கிற் பான்நன்மையி னாகுமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
உயரநது பணிநது முகநதுந தழுவி
வியநது மரனடிக கைமுறை செயயின
பயநதும பிறவிப பயனது வாகும
பயநதும பரிககிற பானநனமையி னாகுமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
உயர்ந்து பணிந்தும் உகந்தும் தழுவி
வியந்தும் அரன் அடி கை முறை செய்யின்
பயந்தும் பிறவி பயன் அது ஆகும்
பயந்தும் பரிக்கில் பான் நன்மையின் ஆகுமே.
பதப்பொருள்:
உயர்ந்து (ஒழுக்கத்தில் உயர்ந்து நின்றும்) பணிந்தும் (இறைவனின் திருவடிகளை பணிந்து தொழுதும்) உகந்தும் (அவனுக்கு செய்கின்ற பணிவிடைகளை விரும்பி செய்தும்) தழுவி (இறைவனின் திருவுருவத்தை தழுவிக் கொண்டும்)
வியந்தும் (அதனால் கிடைக்கின்ற இறையனுபவத்தால் வியப்பு அடைந்தும்) அரன் (இறைவனின்) அடி (திருவடிகளுக்கு) கை (தமது கைகளால்) முறை (தொண்டுகளை) செய்யின் (செய்தால்)
பயந்தும் (கிடைக்கின்ற) பிறவி (பிறவிக்கான) பயன் (மேலான பயனாக) அது (அந்த) ஆகும் (தொண்டே இருக்கும்)
பயந்தும் (கிடைத்த அருளினால்) பரிக்கில் (இறைவனை தந்தையாக பாவித்து தொடர்ந்து அந்த தொண்டுகளை செய்து கொண்டே வந்தால்) பான் (தந்தையாக இருந்து அதை செய்ய வைக்கின்ற இறைவனே) நன்மையின் (அதனால் கிடைக்கின்ற அனைத்து நன்மையாகவும்) ஆகுமே (இருக்கின்றான்).
விளக்கம்:
ஒழுக்கத்தில் உயர்ந்து நின்றும் இறைவனின் திருவடிகளை பணிந்து தொழுதும் அவனுக்கு செய்கின்ற பணிவிடைகளை விரும்பி செய்தும் இறைவனின் திருவுருவத்தை தழுவிக் கொண்டும் அதனால் கிடைக்கின்ற இறையனுபவத்தால் வியப்படைந்தும் இறைவனின் திருவடிகளுக்கு தமது கைகளால் தொண்டுகளை செய்தால் அந்த தொண்டே தாம் எடுத்த பிறவிக்கு கிடைக்கின்ற மிகப் பெரும் பயனாக இருக்கும். அப்படி கிடைத்த அருளினால் இறைவனை தந்தையாக பாவித்து தொடர்ந்து அந்த தொண்டுகளை செய்து கொண்டே வந்தால் தந்தையாக இருந்து அதை செய்ய வைக்கின்ற இறைவனே அதனால் கிடைக்கின்ற அனைத்து நன்மையாகவும் இருக்கின்றான்.