பாடல் #1456: ஐந்தாம் தந்திரம் – 6. கிரியை (இறைவனை அடைவதற்கு அனைவராலும் செய்யக்கூடிய செயல்களே கிரியை ஆகும்)
அன்பி னுருகுவ னாளும் பணிசெய்வன்
செம்பொன் செய்மேனிக் கமலத் திருவடி
முன்புநின் றாங்கே மொழிவ தெனக்கரு
ளென்பினுட் சோதியி லிங்கு நின்றானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
அனபி னுருகுவ னாளும பணிசெயவன
செமபொன செயமெனிக கமலத திருவடி
முனபுநின றாஙகெ மொழிவ தெனககரு
ளெனபினுட சொதியி லிஙகு நினறானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
அன்பின் உருகுவன் நாளும் பணி செய்வன்
செம் பொன் செய் மேனி கமலத் திருவடி
முன்பு நின்று ஆங்கே மொழிவது எனக்கு அருள்
என்பின் உள் சோதியில் இங்கு நின்றானே.
பதப்பொருள்:
அன்பின் (இறைவன் மேல் கொண்ட உண்மையான அன்பினால்) உருகுவன் (உருகுபவனும்) நாளும் (தினந்தோறும்) பணி (செய்கின்ற அனைத்து விதமான செயல்களையும்) செய்வன் (இறைவனுக்காக செய்வதாகவே நினைத்துக் கொண்டு செய்பவனும்)
செம் (தூய்மையான பசும்) பொன் (பொன்னால்) செய் (செய்யப்பட்டது) மேனி (போல பிரகாசிக்கின்ற திருமேனியையும்) கமலத் (செந்தாமரை மலர் போன்ற) திருவடி (திருவடிகளையும் கொண்டு தமக்குள் இருக்கும் சோதி வடிவான இறைவனாகவே)
முன்பு (தமக்கு முன்பு) நின்று (நின்று) ஆங்கே (அங்கு இருக்கின்ற அனைவரையும் பார்ப்பவனும்) மொழிவது (அவர்கள் சொல்லுகின்ற அனைத்துமே) எனக்கு (தமக்கு இறைவன்) அருள் (கொடுத்த அருளாக எடுத்துக் கொள்கின்றவனும் ஆகிய பக்தனின்)
என்பின் (எலும்புகளால் மூடியிருக்கும் உடலுக்கு) உள் (உள்ளே) சோதியில் (தங்கம் போல பிரகாசிக்கின்ற சோதியாக) இங்கு (பக்தன் இருக்கின்ற இடத்திலேயே) நின்றானே (நிற்கின்றான் இறைவன்).
விளக்கம்:
இறைவன் மேல் கொண்ட உண்மையான அன்பினால் உருகுபவனும் தினந்தோறும் தாம் செய்கின்ற அனைத்து விதமான செயல்களையும் இறைவனுக்காகவே செய்வதாகவே நினைத்துக் கொண்டு செய்பவனும் தூய்மையான பசும் பொன்னால் செய்யப்பட்டது போல பிரகாசிக்கின்ற திருமேனியையும் செந்தாமரை மலர் போன்ற திருவடிகளையும் கொண்டு தமக்குள் இருக்கும் சோதி வடிவான இறைவனாகவே தமக்கு முன்பு நிற்கின்றவர்கள் அனைவரையும் பார்ப்பவனும் அவர்கள் சொல்லுகின்ற அனைத்துமே தமக்கு இறைவன் கொடுத்த அருளாக எடுத்துக் கொள்கின்றவனும் ஆகிய பக்தனின் எலும்புகளால் மூடியிருக்கும் உடலுக்கு உள்ளே தங்கம் போல பிரகாசிக்கின்ற சோதியாக பக்தன் இருக்கின்ற இடத்திலேயே நிற்கின்றான் இறைவன்.