பாடல் #1454: ஐந்தாம் தந்திரம் – 6. கிரியை (இறைவனை அடைவதற்கு அனைவராலும் செய்யக்கூடிய செயல்களே கிரியை ஆகும்)
இதுபணிந் தெண்டிசை மண்டல மெல்லா
மதுபணி செய்கின்ற வாளது கூறி
னிதுபணி மானிடர் செய்பணி யீசன்
பதிபணி செய்வது பத்திமை காணே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
இதுபணிந தெணடிசை மணடல மெலலா
மதுபணி செயகினற வாளது கூறி
னிதுபணி மானிடர செயபணி யீசன
பதிபணி செயவது பததிமை காணெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
இது பணிந்து எண் திசை மண்டலம் எல்லாம்
அது பணி செய்கின்ற வாள் அது கூறின்
இது பணி மானிடர் செய் பணி ஈசன்
பதி பணி செய்வது பத்திமை காணே.
பதப்பொருள்:
இது (கிரியை வழிமுறையை கடைபிடிக்கின்றவர்கள் இந்த உடலுக்குள் இருப்பது இறை சக்தியே) பணிந்து (என்பதை அறிந்து கொண்டு அதை பணிந்து வணங்கி) எண் (எட்டு) திசை (திசைகளிலும்) மண்டலம் (இருக்கின்ற மண்டலங்கள்) எல்லாம் (அனைத்திலும்)
அது (அங்கு நிகழ்கின்ற) பணி (அனைத்து விதமான செயல்களையும்) செய்கின்ற (செய்கின்ற) வாள் (ஒளியாக இருக்கின்றதும்) அது (அதுவே என்பதை) கூறின் (எடுத்துச் சொன்னால்)
இது (இந்த உலகத்தில்) பணி (தாம் செய்ய வேண்டிய செயல்கள் என்று) மானிடர் (மனிதர்களால்) செய் (செய்யப் படுகின்ற) பணி (அனைத்து செயல்களும்) ஈசன் (இறைவனே செய்கின்றான் என்பதை அறிந்து கொண்டு)
பதி (அனைத்திற்கும் அதிபதியாக இருக்கின்ற இறைவனுக்கே) பணி (தாம் செய்கின்ற அனைத்து செயல்களையும் செய்வதாக எண்ணிக் கொண்டு) செய்வது (அதை அன்போடு செய்வது) பத்திமை (கிரியை வழியில் செல்லுகின்ற பக்தியின் முறைமை) காணே (என்று கண்டு கொள்ளுங்கள்).
விளக்கம்:
கிரியை வழிமுறையை கடைபிடிக்கின்றவர்கள் இந்த உடலுக்குள் இருப்பது இறை சக்தியே என்பதை அறிந்து கொண்டு அதை பணிந்து வணங்கி எட்டு திசைகளிலும் இருக்கின்ற மண்டலங்கள் அனைத்திலும் நிகழ்கின்ற அனைத்து விதமான செயல்களையும் செய்கின்ற ஒளியாக இருக்கின்றதும் அதுவே என்பதை எடுத்துச் சொன்னால், இந்த உலகத்தில் தாம் செய்ய வேண்டிய செயல்கள் என்று மனிதர்களால் செய்யப் படுகின்ற அனைத்து செயல்களும் இறைவனே செய்கின்றான் என்பதை அறிந்து கொண்டு அனைத்திற்கும் அதிபதியாக இருக்கின்ற இறைவனுக்கே தாம் செய்கின்ற அனைத்து செயல்களையும் செய்வதாக எண்ணிக் கொண்டு அவற்றை அன்போடு செய்வது கிரியை வழியில் செல்லுகின்ற பக்தியின் முறைமை என்று கண்டு கொள்ளுங்கள்.