பாடல் #1452: ஐந்தாம் தந்திரம் – 6. கிரியை (இறைவனை அடைவதற்கு அனைவராலும் செய்யக்கூடிய செயல்களே கிரியை ஆகும்)
கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுற மாமல ரிட்டு வணங்கினு
மூனினை நீக்கி யுணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
கானுறு கொடி கடிகமழ சநதனம
வானுற மாமல ரிடடு வணஙகினு
மூனினை நீககி யுணரபவரக கலலது
தெனமர பூஙகழல செரவொண ணாதெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
கான் உறு கோடி கடி கமழ் சந்தனம்
வான் உறு மா மலர் இட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க்கு அல்லது
தேன் அமர் பூம் கழல் சேர ஒண்ணாதே.
பதப்பொருள்:
கான் (காட்டில் இருக்கும் மரங்களை) உறு (ஊடுறுவிச் சென்று) கோடி (கோடி காத தூரம் பரவுகின்ற) கடி (நறுமணம்) கமழ் (கமழ்கின்ற) சந்தனம் (சந்தனத்தை பூசி வழிபட்டாலும்)
வான் (வானத்தை) உறு (ஊடுறுவும் அளவிற்கு) மா (மிகப் பெரிய அளவு) மலர் (மலர்களால் கட்டிய மாலையை) இட்டு (சூட்டி) வணங்கினும் (வழிபட்டாலும்)
ஊனினை (தான் எனும் எண்ணத்தையும் உடல் சார்ந்த பற்றுக்களையும்) நீக்கி (நீக்கி விட்டு) உணர்பவர்க்கு (இறைவனை உணர்ந்து வழிபடுபவர்களுக்கு) அல்லது (மட்டும் அல்லது)
தேன் (சுவையான தேனினை / தெகிட்டாத தேனைப் போன்ற பேரின்பத்தை கொண்டு இருப்பதால்) அமர் (வண்டுகள் விரும்பி வந்து அமருகின்ற / அடியவர்கள் வந்து சரணடைகின்ற) பூம் (மென்மையான பூவைப் போன்ற) கழல் (இறைவனின் திருவடிகளை) சேர (சென்று சேரும் பெரும் பேறு) ஒண்ணாதே (வேறு யாருக்கும் கிடைக்காது).
விளக்கம்:
காட்டில் இருக்கும் மரங்களை ஊடுறுவிச் சென்று கோடி காத தூரம் பரவுகின்ற நறுமணம் கமழ்கின்ற சந்தனத்தை பூசி வழிபட்டாலும் வானத்தை ஊடுறுவும் அளவிற்கு மிகப் பெரிய அளவு மலர்களால் கட்டிய மாலையை சூட்டி வழிபட்டாலும், தான் எனும் எண்ணத்தையும் உடல் சார்ந்த பற்றுக்களையும் நீக்கி விட்டு இறைவனை உணர்ந்து வழிபடுபவர்களுக்கு மட்டுமின்றி சுவையான தேனை போன்ற பேரின்பத்தை கொண்டு இருப்பதால் வண்டுகள் போன்ற அடியவர்கள் விரும்பி வந்து சரணடைகின்ற மென்மையான பூவைப் போன்ற இறைவனின் திருவடிகளை சென்று சேரும் பெரும் பேறு வேறு யாருக்கும் கிடைக்காது.