பாடல் #1448: ஐந்தாம் தந்திரம் – 5. சரியை (இறைவனை அடைவதற்கு வழிமுறையான சுத்த சைவத்திற்கு ஆதாரமானது சரியை ஆகும்)
கிரிகையில் யோகங் கிளர்ஞான பூசை
யரிய சிவனுரு வமா மரூபந்
தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை
யுரியன நேயத் துயர்பூசை யாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
கிரிகையில யொகங கிளரஞான பூசை
யரிய சிவனுரு வமா மரூபந
தெரியும பருவததுத தெரநதிடும பூசை
யுரியன நெயத துயரபூசை யாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
கிரியையில் யோகம் கிளர் ஞான பூசை
அரிய சிவன் உருவம் ஆம் அரூபம்
தெரியும் பருவத்து தேர்ந்திடும் பூசை
உரியன நேயத்து உயர் பூசை ஆமே.
பதப்பொருள்:
கிரியையில் (கிரியையில் வெளிப்புறமாக செய்யப்படும் பூசைகளை) யோகம் (எண்ணத்தால் யோகத்தில் செய்வது) கிளர் (தமக்குள் இருக்கும் அறிவை கிளர்ச்சி பெற்று எழுப்பும்) ஞான (உயர்வான ஞான) பூசை (பூசையாகும்)
அரிய (அதனால் கிடைப்பதற்கு மிகவும் அரியதான) சிவன் (சிவ பரம்பொருளின்) உருவம் (உண்மை உருவம்) ஆம் (ஆக இருக்கின்ற) அரூபம் (உருவமே இல்லாத அரூப நிலையை)
தெரியும் (அறிந்து கொள்ளும்) பருவத்து (பக்குவத்தை பெறும் படி செய்து) தேர்ந்திடும் (அதில் தேர்ச்சி பெற்ற) பூசை (பூசைக்கு)
உரியன (ஏற்றதாக இருப்பது) நேயத்து (இறைவன் மீது கொண்ட பேரன்பினால் செய்யப்படும்) உயர் (உயர்வான) பூசை (மானசீக பூசையே) ஆமே (ஆகும்).
விளக்கம்:
கிரியையில் வெளிப்புறமாக செய்யப்படும் பூசைகளை எண்ணத்தால் யோகத்தில் செய்து தமக்குள் இருக்கும் அறிவை கிளர்ச்சி பெற்று எழுப்பும் உயர்வான ஞான பூசையாகும். அதனால் கிடைப்பதற்கு மிகவும் அரியதான சிவ பரம்பொருளின் உண்மை உருவமாக இருக்கின்ற உருவமே இல்லாத அரூப நிலையை அறிந்து கொள்ளும் பக்குவத்தை பெறலாம். அந்த பக்குவத்தில் தேர்ச்சி பெற்ற பூசைக்கு ஏற்றதாக இருப்பது இறைவன் மீது கொண்ட பேரன்பினால் செய்யப்படும் உயர்வான மானசீக பூசையே ஆகும்.