பாடல் #1423: ஐந்தாம் தந்திரம் – 2. அசுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் இரண்டாவது)
இணையார் திருவடி யேத்துஞ் சீரங்கத்
திணையா ரிணைக்குழை யீரணை முத்திரை
குணமா ரிணைக்கண்ட மாலையுங் குன்றா
தணைவாஞ் சரியை கிரியையி னார்கே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
இணையார திருவடி யெததுஞ சீரஙகத
திணையா ரிணைககுளை யீரணை முததிரை
குணமா ரிணைககணட மாலையுங குனறா
தணைவாஞ சரியை கிரிகையி னாரகெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
இணை ஆர் திரு அடி ஏத்தும் சீர் அங்கத்து
இணை ஆர் இணை குழை ஈர் அணை முத்திரை
குணம் ஆர் இணை கண்ட மாலையும் குன்றாது
அணைவு ஆம் சரியை கிரியை இன் ஆர்க்கே.
பதப்பொருள்:
இணை (இறைவனுக்கு இணையாக) ஆர் (பேரழகு கொண்ட) திரு (மரியாதைக்கும் மேன்மைக்கும் உரிய) அடி (திருவடிகளை) ஏத்தும் (போற்றி வணங்கும் சாதகர்கள்) சீர் (சீரும் சிறப்புமாக ஒழுக்கத்துடன் பராமரிக்கும்) அங்கத்து (தமது உடலில்)
இணை (இறைவனுக்கு இணையாக) ஆர் (அழகாக இருக்கின்ற) இணை (இரண்டு) குழை (குண்டலங்களை தமது காதுகளில் அணிந்து கொண்டும்) ஈர் (இரண்டு விதமாக) அணை (இறைவனோடு எப்போதும் சேர்த்தே வைத்து இருக்கின்ற) முத்திரை (இறைவனது சின்னங்களாகிய நந்தியும் சூலமும் வைத்தும்)
குணம் (முறையான கயிற்றில்) ஆர் (அழகாக கோர்க்கப்பட்டு) இணை (இறைவனுக்கு இணையாக) கண்ட (கழுத்தில்) மாலையும் (ருத்திராட்ச மாலையை அணிந்து கொண்டும்) குன்றாது (இவை அனைத்தும் இறைவனுக்கு இணையாக இருக்கின்றது என்ற உறுதியான எண்ணத்தில் சிறிதளவும் குறைவு இல்லாமல்)
அணைவு (எப்போதும் தம்மோடு சேர்த்தே) ஆம் (வைத்துக் கொண்டு) சரியை (உடலால் பூஜித்தும்) கிரியை (உடலாலும் மனதாலும் வழிபட்டும்) இன் (இருக்கின்ற) ஆர்க்கே (சாதகர்களுக்கே).
விளக்கம்:
இறைவனுக்கு இணையாக பேரழகு கொண்ட மரியாதைக்கும் மேன்மைக்கும் உரிய திருவடிகளை போற்றி வணங்கும் சாதகர்கள் சீரும் சிறப்புமாக ஒழுக்கத்துடன் பராமரிக்கும் தமது உடலில் இறைவனுக்கு இணையாக அழகாக இருக்கின்ற இரண்டு குண்டலங்களை தமது காதுகளில் அணிந்து கொண்டும் இறைவனோடு எப்போதும் சேர்த்தே வைத்து இருக்கின்ற இறைவனது இரண்டு சின்னங்களாகிய நந்தியும் சூலமும் வைத்தும் முறையான கயிற்றில் அழகாக கோர்க்கப்பட்டு இறைவனுக்கு இணையாக இருக்கின்ற ருத்திராட்ச மாலையை கழுத்தில் அணிந்து கொண்டும் இவை அனைத்தும் இறைவனுக்கு இணையாக இருக்கின்றது என்ற உறுதியான எண்ணத்தில் சிறிதளவும் குறைவு இல்லாமல் எப்போதும் தம்மோடு சேர்த்தே வைத்துக் கொண்டு உடலால் பூஜித்தும் உடலாலும் மனதாலும் வழிபட்டும் இருக்கின்ற சாதகர்களே அசுத்த சைவமாகிய சரியை கிரியை ஆகிய இரண்டு வழிமுறைகளைப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள்.