பாடல் #1314: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)
மேவிய சக்கர மீது வலத்திலே
கோவை யடைவே குரோங்சுரோங் கென்றிட்டுத்
தாவிலீறீங் காரத்தாற் சக்கரஞ் சூழ்ந்து
பூவை புவனா பதியைப்பின் பூசியே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
மெவிய சககர மீது வலததிலெ
கொவை யடைவெ குரொஞ்சுரொங் கெனறிடடுத
தாவிலீறீங காரததாற சககரஞ சுழநது
பூவை புவனா பதியைபபின பூசியெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
மேவிய சக்கரம் மீது வலத்திலே
கோவை அடைவே குரோங் சுரோங் என்று இட்டுத்
தாவில் இரீங்காரத்தால் சக்கரம் சூழ்ந்து
பூவை புவனா பதியைப் பின் பூசியே.
பதப்பொருள்:
மேவிய (ஏற்கனவே வரைந்த) சக்கரம் (புவனாபதி சக்கரத்தின்) மீது (மேல்) வலத்திலே (வலது புறத்திலும்)
கோவை (இறைவனது கோயிலாக இருக்கும் சக்கரத்திற்கு நான்கு நுழைவு வாசல்கள் வைத்து) அடைவே (அடையும் படி இடது புறத்திலும்) குரோங் (க்ரோம்) சுரோங் (ஸ்ரோம்) என்று (எனும் பீஜங்களை) இட்டுத் (எழுதி விட்டுத்)
தாவில் (தாமரைப் பூ போன்று இருக்கின்ற வடிவத்தில்) இரீங்காரத்தால் (ஹ்ரீம் எனும் பீஜ எழுத்தினால்) சக்கரம் (ஏற்கனவே வரைந்த சக்கரத்தை) சூழ்ந்து (சுற்றிலும் முழுவதுமாக சுற்றி இருக்கும் படி எழுத வேண்டும்)
பூவை (இந்த முறைகளின்படி வரையப்பட்ட தாமரைப் பூ போல இருக்கின்ற) புவனா (உலகங்களுக்கு) பதியைப் (அதிபதியாக சேர்ந்து இருக்கின்ற இறைவன் இறைவியின் புவனாபதி சக்கரத்தை) பின் (இதன் பிறகு) பூசியே (பூஜை செய்யுங்கள்).
விளக்கம்:
பாடல் #1313 இல் உள்ளபடி வரையப்பட்ட இறைவனது கோயிலாக இருக்கும் புவனாபதி சக்கரத்தைச் சுற்றி அடைத்து இருக்கும் படி நான்கு வாசல்கள் வைத்து இரண்டு வரிகள் கொண்ட ஒரு கட்டத்தை வரைந்து அதில் வலது புறத்திலும் இடது புறத்திலும் ‘க்ரோம்’ ‘ஸ்ரோம்’ எனும் பீஜங்களை எழுதி விட்டுத் தாமரைப் பூ போன்று இருக்கின்ற வடிவத்தில் ‘ஹ்ரீம்’ எனும் பீஜ எழுத்தை மறுபடியும் மறுபடியும் சக்கரத்தை முழுவதுமாக சுற்றி இருக்கும் படி எழுத வேண்டும். பாடல் #1311 இலிருந்து பாடல் #1314 வரை கொடுக்கப்பட முறைகளின்படி வரையப்பட்ட பிறகு தாமரைப் பூ போல இருக்கின்ற உலகங்களுக்கு அதிபதியாக சேர்ந்து இருக்கின்ற இறைவன் இறைவியின் புவனாபதி சக்கரத்தை பூஜை செய்ய வேண்டும்.
அருமையான விளக்கம் நன்றி. எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர்