பாடல் #108: பாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை
ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனி பணிந்தடி யேன்தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ
ஞாலத்து நம்மடி நல்கிடென் றானே.
விளக்கம்:
இறைவனின் திருக்கோலத்தை அடியவர்களும் இறப்பில்லாத தேவர்களும் சூழ்ந்து நிற்க பால் போன்ற வெண்ணீறு அணிந்த அவனின் திருவுடலைப் பணிந்து அடியவனாகிய யான் தொழுது நிற்கும்போது காக்கும் தொழிலைச் செய்யும் திருமாலுக்கும் படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மனுக்கும் நீ சரிசமமானவன். ஆகையால் உலகத்திற்கு சென்று எமது திருவடியின் திருவருளை அனைவருக்கும் வழங்கிடுக என்று இறைவன் எமக்கு கூறி அருளினான்.
உள் விளக்கம்:
பிரம்மனும் திருமாலும் ஒரு சமயத்தில் ஆன்மாக்களாக இருந்து செய்த மாதவங்களாலேயே இறைவனிடமிருந்து படைக்கும் தொழிலையும் காக்கும் தொழிலையும் பெரும் பேறாகப் பெற்றார்கள் என்பதால் அவர்கள் மாதவம் செய்த இறைவனின் அடியவர்களுக்கு சரிசமமானவர்களே. எனவே உலகில் இறைவனின் திருவடியைப் போற்றி அதன் பயனை மற்றவர்களுக்கும் அருளும் மாதவம் செய்த சிவனடியார்கள் அனைவருமே பிரம்மனுக்கும் திருமாலுக்கும் சரிசமமானவர்கள்.