பாடல் #1011

பாடல் #1011: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

தானவ னாக அவனேதா னாயிட
ஆன இரண்டில் அறிவன் சிவமாகப்
போனவ னன்பிது நாலாம் மரபுறத்
தானவ னாகுமோ ராதித்த தேவரே.

விளக்கம்:

உயிர்கள் அருச்சனை செய்து தனது பக்தியினால் தம்மை சிவமாகவும் சிவமே தானாகவும் ஆகிய இரு வழிகளிலும் சிவத்தை அறிந்து உணர்ந்தவர்களின் பேரன்பினால் இறைவனை அடையும் வழிகளில் நான்காம் நிலையாகிய சாயுச்சிய நிலையை அடைவார்கள். அப்படி சாயுச்சிய நிலையை அடைந்தவர்கள் பேரொளியாகிய ஆதித்ய (சூரிய) தேவராவார்கள்.

குறிப்பு: இறைவன் பேரொளி வடிவில் உயிர்களின் கர்மங்களை பொசுக்கும் நிலையே ஆதித்ய தேவர் ஆகும்.

இறைவனை அடையும் நான்கு முறைகள்:

சாலோகம் – இறைவன் இருக்கும் இடத்தில் அவனோடு சேர்ந்து வாழ்வது.
சாமீபம் – இறைவனுக்கு பக்கத்தில் அமர்ந்து நெருக்கமாக வாழ்வது.
சாரூபம் – இறைவனுக்கு பிரதிநிதியாக அவருக்கு செய்வதை ஏற்றுக்கொள்வது.
சாயுச்சியம் – இறைவனோடு எப்போதும் சேர்ந்து இருப்பது.

பாடல் #1012

பாடல் #1012: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

ஓங்கார முந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகராமும் நீள்கண்டத் தாயிடும்
பாங்கார் நகாரம் பயில்நெற்றி யுற்றிடும்
வீங்காகும் விந்துவும் நாதமே லாகுமே.

விளக்கம்:

அடி வயிற்றுக்குக் கீழே எப்போதும் மூலாதாரத்துடன் ஒளியாக உடனிருக்கும் சக்தியை தினந்தோறும் மனதை ஒரு நிலைப்படுத்தி தியானித்து வந்தால் அந்த ஒளியான சக்தி கீழிருந்து எழுந்து வந்து கழுத்தில் நிற்கும். இந்தப் பயிற்சியை முறைப்படி விடாமல் செய்து வந்தால் நெற்றியின் நடுவில் ஒலியாக இருக்கும் இறைவன் வெளிப்படுவான். அதனைத் தொடர்ந்து நெற்றிக்கு நடுவில் இருக்கும் ஒலியையும் கீழிருந்து மேலே வந்த ஒளியையும் ஒன்றாகச் சேர்த்து மனதை ஒரு நிலைப்படுத்தி தியானித்தால் அந்த ஒளியும் ஒலியும் உடல் முழுவதும் பரவி உடலுக்கு மேலே செல்லும்.

குறிப்பு: இப்பாடலில் மானசீக பூஜையின் மூலம் இறைவனை உணரலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1013

பாடல் #1013: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

நமவது வாசன மான பசுவே
சிவமது சித்திச் சிவமாம் பதியே
நமவற வாதி நாடுவது அன்றாஞ்
சிவமாகு மாமோனஞ் சேர்தல்மெய் வீடே.

விளக்கம்:

உயிர்களின் ஆன்மா தன் ஆசைகளினால் நான் எனும் அகங்கார மாயையோடு பல பிறவி எடுக்கிறது. ஆன்மாவின் தலைவனாகிய இறைவன் சிவமாக உயிர்களுக்குள் தாமாகவே மறைந்து இருக்கின்றான். சாதகர்கள் பாடல் #1003, #1004 மற்றும் #1005 இல் உள்ளபடி அருச்சினை செய்து நான் எனும் அகங்காரம் இல்லாமல் இறைவனை நாடும் போது அன்றே எண்ணங்களே அற்ற நிலையை பெற்று இறைவனோடு சேர்வதே உண்மையான வீடுபேறாகும்.

பாடல் #1014

பாடல் #1014: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

தெளிவரு நாளிற் சிவஅமு தூறும்
ஒளிவரு நாளில் ஓரெட்டில் உகளுங்
ஒளிவரு அப்பதத் தோரிரண் டாகில்
வெளிதரு நாதன் வெளியாய் இருந்தே.

விளக்கம்:

பாடல் #1013 இல் உள்ளபடி உண்மையான வீடுபெற்றை பெற்ற சாதகரின் உடலுக்குள் சிவ அமுது ஊறி தலை உச்சிக்குச் சென்றவுடன் பேரொளி தோன்றி உடலை சுற்றியுள்ள எட்டு தத்துவங்களும் விலகும். அப்படி தோன்றிய பேரொளியை ஒலியாகவும் ஒளியாகவும் தரிசித்தால் பரவெளியில் வீற்றிருக்கும் இறைவன் தமக்குள்ளிருந்து வெளிப்படுவான்.

எட்டு தத்துவங்கள்:

பாடல் #460 இல் உள்ளபடி உயிர்கள் உருவாகும் போது அந்தக் கருவின் முற்பிறவிகளிலிருந்து தொடர்ந்து வினைப் பயன்களால் வரும் கன்மத்துடன் (மும்மலங்களில் ஒன்று) மாயேயம் என்கிற அசுத்த மாயையின் ஏழுவித காரியங்களும் (காலம், நியதி, கலை, வித்தை, இராகம், புருடன், மாயை) சேர்ந்து மொத்தம் எட்டுவித மாயைகளை அந்தக் கரு பெற்றுவிடும். இதுவே எட்டு தத்துவங்களாகும்.

பாடல் #914

பாடல் #914: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

இருந்தஇவ் வட்டங்கள் ஈராறி ரேகை
இருந்த இரேகைமேல் ஈரா றிருத்தி
இருந்த மனைகளும் ஈராறு பத்தொன்
றிருந்த மனையொன்றி லெய்துவன் றானே.

விளக்கம்:

இறைவன் திருக்கூத்தாடுகின்ற திருவம்பல சக்கரத்தை வடிவமைக்க மேலிருந்து கீழாக பன்னிரண்டு கோடுகளும் இடமிருந்து வலமாக பன்னிரண்டு கோடுகளும் வரைந்தால் மொத்தம் 121 கட்டங்கள் வரும். இந்த கட்டங்களுக்குள் சிவயநம எனும் மந்திர எழுத்துக்களை மாற்றி மாற்றி எழுதி அமைத்தால் அந்த சக்கரத்தோடு இறைவன் அமர்ந்திருப்பான்.

பாடல் #915

பாடல் #915: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

தானொன்றி வாழிடந் தன்னெழுத் தேயாகுந்
தானொன்று மந்நான்குந் தன்பே ரெழுத்தாகுந்
தானொன்று நாற்கோணந் தன்னைந் தெழுத்தாகுந்
தானொன்றி லேயொன்று மவ்வரனும் தானே.

விளக்கம்:

பாடல் #914 இல் உள்ளபடி சக்கரத்தில் அமர்ந்திருக்கும் இறைவன் வாழுகின்ற இடம் சக்கரத்தின் நடுவில் இருக்கும் சி என்கின்ற முதல் எழுத்தாகும். அந்த சக்கரத்தில் இருக்கும் மற்ற நான்கு எழுத்துக்களாகிய வ ய ந ம ஆகியவை இறைவனின் பேரெழுத்தாகும். சக்கரத்தின் நான்கு மூலைகளிலும் இறைவன் வாழுகின்ற சி என்ற முதல் எழுத்தே அரனாக இருந்து மொத்தம் ஐந்து எழுத்தாகின்றது. சக்கரத்தில் உள்ள அனைத்து எழுத்துக்களும் வேறு வேறாக இருந்தாலும் அவை அனைத்தும் இறைவனின் திருவுருவமாக இருக்கும் ஓம் என்னும் ஓங்கார எழுத்தாகவே இருக்கின்றது.

பாடல் #916

பாடல் #916: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அரகர என்ன அரியதொன் றில்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப் பன்றே.

விளக்கம்:

இறைவனின் திருஉருவாக இருக்கும் ஓங்கார மந்திரத்தைக் குறிப்பதே ஹரஹர எனும் மந்திரமாகும். இதுவே திருவம்பலச் சக்கரத்தில் சிவசிவ என்று அமர்ந்திருக்கும். இதைவிட அறிந்து உணர்ந்து கொள்வதற்கு மிகவும் கடினமான மந்திரம் வேறொன்று இல்லை. அதனாலேயே உலகத்து உயிர்கள் இதை அறிந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள். இந்த மந்திரத்தை அறிந்து உணர்ந்து செபித்தால் அனைத்து பிறவிகளும் அன்றே அழிந்து பிறவி இல்லாத நிலையை அடைந்து தேவர்களாகவே ஆகிவிடுவார்கள்.

குறிப்பு: திருவம்பல சக்கரத்தை வரைந்து செபிப்பவர்களுக்கு சிவசிவ மந்திரம் பயனளிப்பது போல ஹரஹர மந்திரத்தை அறிந்து உணர்ந்து செபித்தாலே பலன் அளிக்கும்.

பாடல் #917

பாடல் #917: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம்
எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும்
ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப்
பட்டது மந்திரமும் பான்மொழி பாலே.

விளக்கம்:

திருவம்பல சக்கரத்தில் நடுவில் இருக்கும் சி மந்திர எழுத்தை சுற்றி உள்ள எட்டு கட்டங்களும் எமது தலைவனாகிய இறைவன் வீற்றிருக்கும் இடங்களாகும். இந்த எட்டு கட்டங்களில் பாடல் #915 இல் உள்ளபடி மறைந்திருக்கும் ஒங்கார எழுத்தும் சக்கரத்தில் எழுதியிருக்கும் சிவயநம எழுத்துக்களும் ஒன்றாக சேரும் போது ஓம் நமசிவாய என்னும் மந்திரமாகிறது. தூய்மையான எண்ணங்களோடு இந்த மந்திரத்தை ஜெபிக்க ஈரேழு பதினான்கு உலகங்களிலும் ஒலியாகவும் ஒளியாகவும் விளங்குகின்ற சிவசக்தி திருவம்பல சக்கரத்தில் சிறந்து வீற்றிருக்கும்.

பாடல் # 918

பாடல் # 918 : நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் ( ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன்
ஒட்டி யிருந்த உபாயம் அறிகிலர்
விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்
கட்டவல் லாருயிரைக் காக்கவல் லாரே.

விளக்கம்:

உயிர்கள் தமக்குள் இருக்கும் சகஸ்ரதள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் இறைவன் சிவசக்தியாய் ஒன்றிணைந்து வீற்றிருக்கும் விதத்தை அறிவதில்லை. திருவம்பல சக்கரத்தில் பாடல் #915 இல் உள்ளபடி மறைந்திருக்கும் ஒங்கார எழுத்தையும் மறையாமல் வீற்றிருக்கும் சிவயநம எழுத்துக்களையும் ஒன்றாக சேர்த்து தூய்மையான எண்ணத்தோடு ஜெபிக்க முடிந்தவர்களின் சகஸ்ரதள தாமரை மலர் மலர்ந்து என்றும் இறவாத நிலையை அடைவார்கள்.

பாடல் # 919

பாடல் # 919: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் ( ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம்
ஆலய மாக அமர்ந்தவித் தூலம்போய்
ஆலய மாக வருகின்ற சூக்குமம்
ஆலய மாக அமர்ந்துஇருந் தானே.

விளக்கம்:

பாடல் #914 இல் உள்ளபடி திருவம்பலச் சக்கரத்தில் இருக்கும் பஞ்சாட்சர மந்திரத்தையே கோயிலாக கொண்டு இறைவன் அமர்ந்த பிறகு சாதகர்கள் சக்கரத்தில் வரிவடிவமாக இருக்கும் சிவயநம மந்திர எழுத்துக்களில் வீற்றிருக்கும் இறைவன் மேல் எண்ணத்தை வைத்து செபித்தால் பாடல் #915 இல் உள்ளபடி சக்கரத்தில் சூட்சுமமாக மறைந்திருக்கும் ஓங்கார மந்திரத்தை அறிந்து கொள்ள முடியும். அறிந்தபின் அதையும் சேர்த்து ஓம் நமசிவாய எனும் திருமந்திரமாக செபிக்கும் சாதகர்கள் பஞ்சாட்சர மந்திரம் கொண்ட திருவம்பலச் சக்கரத்தைக் கோயிலாக கொண்டு அமர்ந்ததைப் போலவே அந்த மந்திரத்தை செபிக்கும் தமது உடலையும் கோயிலாக கொண்டு இறைவன் தமக்குள்ளும் வீற்றிருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்வார்கள்.