பாடல் #1310

பாடல் #1310: நான்காம் தந்திரம் – 14. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

எட்டா கியசத்தி யெட்டாகும் யோகத்துக்
கட்டாகி நாதாந்தத் தெட்டுங் கலப்பித்
தொட்டாத விந்துவுந் தானற் றொழிந்து
கிட்டா தொழிந்தது கீழான மூடர்க்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எடடாகிய சததி யெடடாகும யொகததுக
கடடாகி நாதாநதத தெடடுங கலபபித
தொடடாத விநதுவுந தானற றெழிநது
கிடடா தொழிநதது கீழான மூடரககெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

எட்டாகிய சத்தி எட்டாகும் யோகத்துக்
கட்டாகி நாத அந்தத்து எட்டும் கலப்பித்து
ஒட்டாத விந்துவும் தான் அற்று ஒழிந்து
கிட்டாது ஒழிந்தது கீழான மூடர்க்கே.

பதப்பொருள்:

எட்டாகிய (எட்டு விதமாக இருக்கின்ற) சத்தி (சக்திகளே) எட்டாகும் (எட்டு விதமான) யோகத்துக் (யோகங்களின் பூரண சக்தியாக இருக்கின்றார்கள்)
கட்டாகி (இந்த எட்டு விதமான சக்திகளும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து) நாத (நாதமாகிய) அந்தத்து (எல்லையாக இருக்கின்ற பராசக்தியில்) எட்டும் (எட்டு சக்திகளும்) கலப்பித்து (கலந்து ஒன்றாகும் போது)
ஒட்டாத (அந்தப் பராசக்தியோடு ஒட்டாமல் தனியாக பிரிந்து நிற்கின்ற) விந்துவும் (சாதகரின் ஆன்ம ஒளியும்) தான் (தான் எனும் அகங்காரத்தை) அற்று (நீக்கி) ஒழிந்து (அழிந்து இல்லாமல் போகும்)
கிட்டாது (இந்த நிலை கிடைக்காமல்) ஒழிந்தது (அழிந்து போய்விடும்) கீழான (இறைவனைப் பற்றிய ஞானம் கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்தாத கீழ்மையான) மூடர்க்கே (முட்டாள்களுக்கு).

விளக்கம்:

பாடல் #1309 இல் உள்ளபடி சாதகர்கள் தங்களின் யோகத்தினால் அடையக் கூடிய எட்டு விதமான சித்திகளில் இருக்கின்ற எட்டு விதமான சக்திகளே எட்டு விதமான யோகங்களுக்கும் பூரண சக்திகளாக இருக்கின்றார்கள். இந்த எட்டு விதமான சக்திகளும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து நாத எல்லையாக இருக்கின்ற பராசக்தியோடு ஒன்றாகக் கலந்து நிற்கும் போது அவர்களோடு ஒட்டாமல் தனியாக பிரிந்து நிற்கின்ற சாதகரின் ஆன்ம ஒளியும் தான் எனும் அகங்காரம் நீங்கி அழிந்து போகும். தான் என்பது முற்றிலும் அழிந்து இறைவியோடு ஒன்றாக நிற்கின்ற இந்த நிலை இறைவனைப் பற்றிய ஞானம் கிடைத்தும் அதை சரியாகப் பயன்படுத்தாத கீழ்மையான முட்டாள்களுக்கு கிடைக்காமல் அழிந்து போகும்.

பாடல் #1309

பாடல் #1309: நான்காம் தந்திரம் – 14. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

ஏகப் பராசத்தி யீசற்கா மங்கமே
யாகப் பராவித்தை யாமுத்தி சித்தியே
யேகப் பராசத்தி யாகச் சிவகுரு
யோகப் பராசத்தி யுண்மை யெட்டாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எகப பராசததி யீசறகா மஙகமெ
யாகப பராவிததை யாமுததி சிததியெ
யெகப பராசததி யாகச சிவகுரு
யொகப பராசததி யுணமை யெடடாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஏகப் பராசத்தி ஈசற்கு ஆம் அங்கமே
ஆகப் பராவித்தை ஆம் முத்தி சித்தியே
ஏகப் பராசத்தி ஆகச் சிவ குரு
யோகப் பராசத்தி உண்மை எட்டாமே.

பதப்பொருள்:

ஏகப் (ஒன்றாகிய) பராசத்தி (பரா சக்தியே) ஈசற்கு (இறை) ஆம் (அவருக்கு) அங்கமே (சரி பாதி அங்கமாக இருக்கின்றாள்)
ஆகப் (அவளே தனது திருமேனியில்) பராவித்தை (சாதகர்கள் அனுபவத்தில் உணருகின்ற பரா வித்தையாகவும்) ஆம் (இருக்கின்றாள்) முத்தி (முக்தியாகவும்) சித்தியே (சாதகர்கள் அடையக்கூடிய சித்திகளாகவும் அவளே இருக்கின்றாள்)
ஏகப் (ஒன்றாகிய) பராசத்தி (பரா சக்தியே) ஆகச் (பார்க்கின்ற) சிவ குரு (குருவாக இருக்கும் இறைவனாகவும் இருக்கின்றாள்)
யோகப் (யோகத்தினால் அடையக் கூடிய எட்டுவிதமான சித்திகளில்) பராசத்தி (பரா சக்தியானவள்) உண்மை (பேருண்மையின்) எட்டாமே (எட்டு விதமான சக்திகளாகவும் இருக்கின்றாள்).

விளக்கம்:

பாடல் #1308 இல் உள்ளபடி சாதகர்கள் அறிந்து கொண்ட சிவ உருவமாக இருப்பவள் ஒன்றாகிய பரா சக்தியே. அவளே இறைவனுக்கு சரி பாதி அங்கமாகவும் இருக்கின்றாள். தனது திருமேனியில் சாதகர்கள் அனுபவத்தில் உணருகின்ற பரா வித்தையாகவும், சாதகர்களுக்கு கிடைக்கும் முக்தியாகவும், அவர்கள் அடையக் கூடிய சித்திகளாகவும் அவளே இருக்கின்றாள். ஒன்றாகிய பரா சக்தியே சாதகர்கள் பார்க்கின்ற குருவாக இருக்கும் இறைவனாகவும் இருக்கின்றாள். சாதகர்கள் தங்களின் யோகத்தினால் அடையக் கூடிய எட்டு விதமான சித்திகளில் பேருண்மையாக இருக்கின்ற எட்டு விதமான சக்திகளாகவும் பரா சக்தியே இருக்கின்றாள்.

பாடல் #1308

பாடல் #1308: நான்காம் தந்திரம் – 14. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

ஓரு மிதுவே யுரையுமித் தெய்வத்தைத்
தேரிற் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்
வாரித் திரிகோண் மனவின்ப முத்தியுந்
தேரி லறியுஞ் சிவகாயந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒரு மிதுவெ யுரையுமித தெயவததைத
தெரிற பிறிதிலலை யானொனறு செபபககெள
வாரித திரிகொண மனவினப முததியுந
தெரி லறியுஞ சிவகாயந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஓரும் இதுவே உரையும் இத் தெய்வத்தை
தேரில் பிறிது இல்லை யான் ஒன்று செப்பக் கேள்
வாரித் திரிகோண் மனம் இன்ப முத்தியும்
தேரில் அறியும் சிவ காயம் தானே.

பதப்பொருள்:

ஓரும் (சாதகர் தமக்குள் ஆராய்ந்து அறிகின்ற) இதுவே (இந்த புவனாபதி சக்கரமே) உரையும் (யானும் எடுத்துச் சொல்கின்ற) இத் (இந்த) தெய்வத்தை (தெய்வத்தைப் பற்றி)
தேரில் (உணர்ந்து அறிந்து கொண்டால்) பிறிது (வேறொரு தெய்வமே) இல்லை (தேவை இல்லை) யான் (யாம்) ஒன்று (ஒரு விஷயத்தை) செப்பக் (சொல்லும்படி) கேள் (கேளுங்கள்)
வாரித் (உங்களுக்கும் மானசீகமாக வருவித்த) திரிகோண் (மூன்று கோணங்களைக் கொண்ட இந்த புவனாபதி சக்கரத்தில்) மனம் (உங்களின் மனதை அசையாமல் வைத்து தியானித்தால்) இன்ப (பேரின்பமும்) முத்தியும் (முக்தியும்)
தேரில் (என்ன என்பதை முழுவதுமாக அறிந்து கொள்ள முடியும்) அறியும் (அப்படி அறிந்து கொண்ட பிறகு) சிவ காயம் (சிவ உருவம் எது என்பதையும்) தானே (உங்களால் அறிந்து கொள்ள முடியும்).

விளக்கம்:

பாடல் #1307 இல் உள்ளபடி சாதகர்கள் தங்களுக்குள் ஆராய்ந்து அறிந்து கொண்ட மூன்று வித்தைகளால் தெரிந்து கொண்ட புவனாபதி சக்கரத்தில் வீற்றிருக்கும் இந்த தெய்வத்தைப் பற்றியே யாம் எடுத்துச் சொல்கிறோம். இந்த தெய்வத்தை முழுவதுமாக உணர்ந்து கொண்டால் வேறு ஒரு தெய்வம் எதுவும் தேவை இல்லை. யாம் சொல்கின்ற ஒரு விஷயத்தை கவனமாகக் கேளுங்கள். சாதகர்கள் தங்களுக்குள் மானசீகமாக வருவித்த மூன்று கோணங்களைக் கொண்ட இந்த புவனாபதி சக்கரத்தில் தங்களின் மனதை அசையாமல் வைத்து தியானித்தால் பேரின்பமும் முக்தியும் என்ன என்பதை முழுவதுமாக அவர்களால் அறிந்து கொள்ள முடியும். அப்படி அறிந்து கொண்ட பிறகு சிவ உருவம் எது என்பதையும் அவர்களால் அறிந்து கொள்ள முடியும்.

பாடல் #1307

பாடல் #1307: நான்காம் தந்திரம் – 14. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

ககராதி யோரைந்துங் காணிய பொன்மை
யகராதி யோரக் கரத்தமே போலுஞ்
சகராதி நாலஞ்சு தான்சுத்த வெண்மை
மகராதி மூவித்தை காமிய முத்தியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

காரதி யொரைநதுங காணிய பொனமை
யகராதி யொர ககரததமெ பொலுஞ
சராதி நாலஞசு தானசுதத வெணமை
மகராதி மூவிததை காமிய முததியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ககர ஆதி ஓர் ஐந்தும் காணிய பொன்மை
அகர ஆதி ஓர் அக் அரத்தமே போலும்
சகர ஆதி நால் அஞ்சு தான் சுத்த வெண்மை
மகர ஆதி மூவித்தை காமிய முத்தியே.

பதப்பொருள்:

ககர (ககாரம் / க எழுத்து) ஆதி (எழுத்திற்கு மூலமாக இருக்கின்ற) ஓர் (ஒரு) ஐந்தும் (ஐந்து எழுத்துக்களும்) காணிய (தங்களுக்குள் தரிசித்தால்) பொன்மை (அவை பொன் நிறத்தில் இருக்கும்)
அகர (அகாரம் / அ எழுத்து) ஆதி (எழுத்திற்கு மூலமாக இருக்கின்ற) ஓர் (ஒரு) அக் (சுத்த) அரத்தமே (சிவப்பு நிறமே) போலும் (போல இருக்கும்)
சகர (சகாரம் / ச எழுத்து) ஆதி (எழுத்திற்கு மூலமாக இருக்கின்ற) நால் அஞ்சு (நான்கும் ஐந்தும் பெருக்கி வரும் இருபது எழுத்துக்களும்) தான் (தமது தன்மையில்) சுத்த (சுத்தமான) வெண்மை (வெள்ளை நிறத்தில் இருக்கும்)
மகர (உயிர்களுக்கு) ஆதி (ஆதியிலிருந்தே தொடர்ந்து வருகின்ற) மூவித்தை (படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்றின் பிறவிச் சுழற்சியில் சிக்கி இருக்கும் சுத்த வித்தையிலிருந்து மேலுள்ள மந்திரங்களைத் ஞானமாகத் தெரிந்து கொள்கின்ற அபர வித்தை பெற்று அதன் பிறகு அதை தமக்குள்ளேயே அனுபவ பூர்வமாக உணருகின்ற பர வித்தையைப் பெற்றால்) காமிய (ஆதியிலிருந்தே உயிர்களைத் தொடர்ந்து வருகின்ற அனைத்து கர்மங்களும் அழிந்து) முத்தியே (முத்தியை இறையருளால் அடையலாம்).

விளக்கம்:

ககர எழுத்திற்கு (க) மூலமாக இருக்கின்ற ஐந்து எழுத்துக்களையும் சாதகர்கள் தங்களுக்குள் தரிசித்துப் பார்த்தால் அவை பொன் நிறத்தில் இருக்கும். அது போலவே இரண்டாவது எழுத்தான அகர எழுத்திற்கு (அ) மூலமாக இருக்கின்ற எழுத்துக்கள் அனைத்துமே சுத்தமான சிவப்பு நிறத்தில் இருக்கும். அது போலவே மூன்றாவது எழுத்தான சகர எழுத்திற்கு (ச) மூலமாக இருக்கின்ற இருபது எழுத்துக்களும் சுத்தமான வெள்ளை நிறத்தில் இருக்கும். உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கின்ற புவனாபதி சக்கரத்தில் இருக்கின்ற இந்த மூன்று எழுத்துக்களையும் அதன் மூல எழுத்துக்களாகிய இருபத்தாறு எழுத்துக்களையும் மானசீகமாகத் தமக்குள் தரிசிக்கும் சாதகர்களுக்கு ஆதியிலிருந்தே உயிர்களைத் தொடர்ந்து வருகின்ற படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்றின் பிறவிச் சுழற்சியில் சிக்கி இருக்கும் சுத்த வித்தையிலிருந்து இந்த மூன்று எழுத்துக்களையும் ஞானமாகத் தெரிந்து கொள்கின்ற அபர வித்தை பெற்று அதன் பிறகு அதை தமக்குள்ளேயே அனுபவ பூர்வமாக உணருகின்ற பர வித்தையைப் பெற்றால் ஆதியிலிருந்தே தம்மைத் தொடர்ந்து வருகின்ற அனைத்து கர்ம வினைகளும் நீங்கி முக்தியை இறையருளால் அடைவார்கள்.

பாடல் #1306

பாடல் #1306: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

உணர்ந்தெழு மந்திர மோமெனு முள்ளே
யணைந்தெழு மாங்கதி யாதிய தாகுங்
குணர்ந்தெழு சூதனுஞ் சூதியுங் கூடிக்
கணந்தெழுங் காணு மக்காமுகை யாமே.

விளக்கம்:

பாடல் #1305 இல் உள்ளபடி சாதகர் தமக்குள் சாம்பவி மண்டலச் சக்கரத்தை பேரின்ப உருவமாக உணரும் பொழுது அவருக்குள்ளிருந்து எழுகின்ற மந்திரமானது ஓம் என்று நீட்டி உச்சரிக்கும் ஓங்காரத்தின் ஓரெழுத்திலேயே அடங்கி விடும். அப்போது சாதகரோடு சேர்ந்து எழுகின்ற ஓங்காரமே சாதகர் சென்று அடையும் கதி மோட்சமாகவும் அவர் ஆரம்பித்த ஆதி மூலமாகவும் இருக்கின்றது. இதை சாதகர் முழுவதுமாக உணரும் போது இதுவரை அவருக்குள் மாயையால் மறைந்து விளையாடிக் கொண்டு இருந்த இறைவனும் இறைவியும் மாயை நீங்கி வெளிப்பட்டு சாதகரோடு ஒன்றாகக் கலந்து சாம்பவி மண்டலச் சக்கரத்தின் பேரின்ப வடிவமாகவே இருப்பார்கள். அதன் பிறகு சாதகரும் அந்த பேரின்பத்திலேயே இறைவனோடும் இறைவியோடும் என்றும் இலயித்து இருப்பார்.

கருத்து:

சாம்பவி மண்டலச் சக்கரத்தில் உள்ள மந்திரத்தின் ஐந்து எழுத்துக்களும் அவருக்குள் ஓங்காரத்தின் ஓரெழுத்தாகவே சேர்ந்து எழும் போது சாதகர் சாம்பவி மண்டலச் சக்கரமாகவே ஆகி அதில் இருக்கும் இறைவனோடும் இறைவியோடும் கலந்து அதிலேயே இலயித்து இருப்பார்.

பாடல் #1305

பாடல் #1305: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

ஆரு முரைசெய்ய லாமஞ் செழுத்தாலே
யாரு மறியாத வானந்த ரூபமாம்
பாரும் விசும்பும் பகலு மதியதி
யூனு முயிரு முணர்வது வாமே.

விளக்கம்:

சாம்பவி மண்டலச் சக்கரத்தில் உள்ள மந்திரமாகிய ‘சிவாய நம’ எனும் ஐந்து எழுத்துக்களை யாரும் அசபையாக உச்சரிக்கலாம். அதை முறைப்படி உச்சரித்து சாதகம் செய்பவர்களுக்கு யாராலும் எளிதில் அறிந்து கொள்ள முடியாத பேரின்ப உருவமாக இருக்கின்ற சாம்பவி மண்டலச் சக்கரத்தை அறிந்து கொள்ளலாம். அதை அறிந்து கொண்ட சாதகர்களுக்கு உலகமாகவும் ஆகாயமாகவும் சூரியனாகவும் சந்திரனாகவும் பாடல் #1302 இல் உள்ளபடி பொன் போன்ற உடலாகவும் உயிராகவும் உணர்வாகவும் அந்த சாம்பவி மண்டலச் சக்கரத்தின் பேரின்ப உருவமே இருக்கின்றது.

பாடல் #1304

பாடல் #1304: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

பகையில்லை யென்றும் பணிந்தவர் தம்பால்
நகையில்லை நாளும் நன்மைக ளாகும்
வினையில்லை யென்றும் விருத்தமு மில்லைத்
தகையில்லைத் தானுஞ் சலமது வாமே.

விளக்கம்:

பாடல் #1303 இல் உள்ளபடி உலகத்தில் உள்ள எந்தவொரு பற்றுக்களும் சாதகர்களுக்கு இல்லாமல் போய்விடும். இறைவனை வணங்கித் தொழுகின்ற சாதகருக்கு அவரைச் சுற்றி இருக்கின்ற உலகத்தால் நன்மை தீமைகள் எதுவும் இல்லை. அனைத்து நாட்களும் அவருக்கு நன்மையான நாட்களாகவே இருக்கும். நல்வினை தீவினை ஆகிய எதுவுமே அவருக்கு இல்லாமல் போய்விடும். இனி எப்போதும் புதியதாக வினைகள் எதுவும் வந்து சேராது. தமது சாதகத்திற்கு தடைகள் எதுவும் இல்லாமல் தாமும் தடை இல்லாமல் உலக நன்மைக்காகச் சுழற்சியாகத் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டே இருக்கின்ற நிலையை அடைந்து விடுவார்.

பாடல் #1303

பாடல் #1303: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

ஆமே எழுத்தஞ்சு மாம்வழி யேயாகப்
போமே யதுதானும் போம்வழி யேபோகா
னால்நாமே நினைத்தன செய்யலு மாகும்
பார்மே லொருவர் பகையில்லை தானே.

விளக்கம்:

பாடல் #1302 இல் உள்ளபடி சாம்பவி மண்டலச் சக்கரத்தின் செயலாக இருக்கின்ற சக்தியின் அருள் பெற்ற சாதகர்கள் பாடல் #1300 இல் உள்ளபடி அசபையாக உச்சரிக்கின்ற ‘சிவாய நம’ எனும் மந்திரத்தில் உள்ள ஐந்து எழுத்துக்களே இறைவனை நோக்கி சாதகரின் எண்ணங்களை எடுத்துச் செல்லும் வழியாக இருக்கின்றன. சாதகர்கள் தன்னுடைய எண்ணங்களை சிந்தனை போகும் போக்கில் போக விடாமல் சிவாயநம என்னும் எழுத்துக்களின் வழியாக இறைவனை நோக்கிச் செலுத்திக் கொண்டே இருந்தால் சாதகர்கள் நினைக்கின்ற அனைத்தையும் செயலாக்க முடியும். அதன் பிறகு உலகத்தில் உள்ள எந்தவொரு பற்றுக்களும் சாதகர்களுக்கு இல்லாமல் போய்விடும்.

கருத்து: சாதகர் தனக்குள் தோன்றும் எண்ணத்தின் வழி செல்லாமல் தான் அசபையாக உச்சரித்துக் கொண்டிருக்கும் சிவாயநம மந்திரத்துடன் தனது எண்ணங்களை செலுத்தினால் இந்த உலகத்தில் சாதகர் நினைக்கின்ற அனைத்தையும் அவர் செயலாக்க முடியும்.

Thirumandhiram by Thirumoolar

Thirumandhiram original Tamil songs with their English translation has been masterfully translated by Dr. B. Natarajan and published by Shri. Ramakrishna Matt is given freely here to read and download for the benefit of those who do not understand Tamil language. All copyrights of this Book and contents belongs to Shri. Ramakrishna Matt only.

https://kvnthirumoolar.com/wp-content/uploads/2021/11/Thirumandhiram-A-Tamil-Scriptural-Classic.pdf

பாடல் #1302

பாடல் #1302: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

காணும் பொருளுங் கருதிய தெய்வமும்
பேணும் பதியும் பெருகிய தீர்த்தமு
மூணு முணர்வு முறக்கமுந் தானாயக்
காணுங் கனகமுங் காரிகை யாமே.

விளக்கம்:

பாடல் #1301 இல் உள்ளபடி சாதகர்கள் தமக்குள் கண்டு உணர்ந்து கொண்ட பேருண்மையான பரம்பொருளே அவர்களின் எண்ணத்திற்கு ஏற்றபடியான வடிவங்களைக் கொண்ட தெய்வமாக அவர்களுக்குள் வீற்றிருக்கின்றார். தமது உடலுக்குள் பரம்பொருளே தெய்வமாக வீற்றிருப்பதால் சாதகர்கள் முறையாகப் பேணிப் பாதுகாக்கின்ற உடலும் அதனால் சாதகர்களுக்குள் ஊற்றெடுத்துப் பெருகுகின்ற அமிழ்தமும் சாதகர்களின் ஆன்மா நுகர்கின்ற இன்பமும் அதனால் கிடைக்கின்ற பேரின்ப உணர்வும் அந்த உணர்விலேயேஎ இலயித்து இருகின்ற நிலையும் இந்த நிலையை அடைந்ததும் அவர்கள் காணும் படி தானாகவே பொன் போல மாறுகின்ற உடலும் ஆகிய இவை அனைத்துமே சாம்பவி மண்டலச் சக்கரத்தின் செயலாக இருக்கின்ற இறை சக்தியின் அருளால் கிடைக்கின்ற பேறுகள் ஆகும்.

கருத்து: சாம்பவி மண்டலச் சக்கர சாதகத்தை செய்கின்ற சாதகர் பேருண்மையான பரம்பொருளைத் தமக்குள் கண்டு உணர்ந்து இறைவன் வீற்றிருக்கும் தமது உடலையே கோயிலாக எண்ணிப் பேணிப் பாதுகாத்து உள்ளிருக்கும் இறைவனைப் போற்றி வணங்கி வழிபடும் போது அவரது ஆன்மா இன்பத்தை நுகருகின்றது. அதன் பிறகு அவருக்குள் அமிழ்தம் ஊற்றெடுக்கின்றது. அந்த அமிழ்தத்தைப் பருகியப் பேரின்ப உணர்விலேயே சாதகர் இலயித்து இருக்கும் போது அவரின் உடல் பொன் போல மாறி என்றும் அழியாத நிலை பெறுகின்றது. இவை அனைத்தும் சாம்பவி மண்டலச் சக்கரத்தின் செயலாக இருக்கின்ற இறை சக்தியினால் அவருக்கு கிடைக்கின்றது.