பாடல் #138

பாடல் #138: முதல் தந்திரம் – 1. உபதேசம்

திருவடி யேசிவ மாவது தேரில்
திருவடி யேசிவ லோகம்சிந் திக்கில்
திருவடி யேசெல் கதியது செப்பில்
திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.

விளக்கம்:

பேரான்மாவாக நின்று கொண்டிருக்கும் இறைவனின் திருவடிகளை உணர்ந்து கொண்டால் இறைவனின் திருவடியே சிவமாக இருக்கும். இறைவன் இருக்கும் சிவலோகம் எது என்று சிந்தித்தால் இறைவனின் திருவடிகளே சிவலோகமாக இருக்கின்றது. உயிர்கள் சென்று சேருகின்ற இடம் எது என்று சொன்னால் இறைவனின் திருவடிகளே சென்று சேரும் இடமாக இருக்கின்றது. தாமக்குள் இருக்கும் இறைவனை உள்ளுக்குள் உணர்ந்து தெளிபவர்களுக்கு இறைவனின் திருவடிகளே அவர்கள் எப்போதும் சென்று தஞ்சமடையும் இடமாக இருக்கின்றது.

பாடல் #139

பாடல் #139: முதல் தந்திரம் – 1. உபதேசம்

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.

விளக்கம்:

குருவின் திருமேனியைத் தரிசித்து அவரது உருவத்தைத் தமது உருவமாகவே எண்ணி தியானிப்பதும் குருவின் திருநாமத்தை மந்திரமாக சொல்லிக்கொண்டே தியானிப்பதும் குருவின் திருவார்த்தைகளைத் தமக்குள்ளே கேட்டு உணர்வதும் எப்போதும் குருவின் திரு உருவத்தைத் தம் மனதிற்குள் சிந்தித்து தியானிப்பதும் ஆகிய இந்த செய்கைகள் அனைத்தும் மும்மலங்களும் நீங்கித் தாம் யார் இறைவன் யார் என்பதைத் தமக்குள் உணர்ந்து தெளிகின்ற பேரறிவு ஞானத்தைக் கொடுக்கும்.

பாடல் #140

பாடல் #140: முதல் தந்திரம் – 1. உபதேசம்

தானே புலனைந்தும் தன்வச மாயிடும்
தானே புலனைந்தும் தன்வசம் போயிடும்
தானே புலனைந்தும் தன்னில் மடைமாறும்
தானே தனித்தெம் பிரான்தனைச் சந்தித்தே.

விளக்கம்:

குருவின் அருளால் இறைவனைத் தமக்குள் உணர்ந்து தெளிவு பெறுபவர்களுக்குத் தானாகவே இதுவரை அவர்களை ஆட்டி வைத்திருந்த ஐந்து புலன்களும் அவர்களின் வசமாகும். அவ்வாறு அவர்களின் வசமான ஐந்து புலன்களும் அவைகளின் தனிப்பட்ட தன்மைகளை இழந்துவிடும். அவ்வாறு தனிப்பட்ட தன்மைகளை இழந்த ஐந்து புலன்களும் அவர்களுக்குக் கட்டுப்பட்டு அவர்களின் விருப்பம் போல செயல்படுபவையாக மாறிவிடும். அவ்வாறு விருப்பம் போல செயல்படும் ஐம்புலன்களும் அவை மூலம் வந்த மலங்கள் முழுவதும் குருவின் திருவருளால் தாமாகவே அவர்களை விட்டு நீங்கி அவர்களின் ஆன்மா மட்டுமே இறைவனைச் சென்று சந்திக்கும்.

பாடல் #141

பாடல் #141: முதல் தந்திரம் – 1. உபதேசம்

சந்திப் பதுநந்தி தன்திருத் தாளினை
சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி
வந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால்
புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே.

விளக்கம்:

குருவின் அருளினால் தமது அனைத்து மலங்களும் நீங்கிச் சென்று சந்திப்பது இறைவனின் திருவடிகளே ஆகும். எப்போதும் சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டியது இறைவனின் திருமேனியே ஆகும். உண்மையை மட்டுமே பேசுகின்ற வாயால் எப்போதும் வணங்கித் துதிக்க வேண்டியது இறைவனின் திருநாமமே ஆகும். நெஞ்சத்திலும் எண்ணத்திலும் என்றும் நிலைத்து நிற்க வேண்டியது குருநாதர் கூறிய பொன்னான போதனைகளே ஆகும்.

பாடல் #142

பாடல் #142: முதல் தந்திரம் – 1. உபதேசம்

போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்
நாதன் நடத்தால் நயனம் களிகூர
வேதம் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.

விளக்கம்:

குருநாதர் கொடுத்த புண்ணியமான போதனைகளைத் தமது எண்ணத்தில் வைத்து அவற்றின் பொருளுணர்ந்து தமக்குள் தெளிவு பெற்றவர்கள் தாம் பெற்ற பிறவியின் புண்ணியத்தை அடைந்தவர்கள் ஆவார்கள். அப்படி புண்ணியம் பெற்றவர்கள் குருவின் திருவருளால் இறைவனின் திருநடனத்தைத் தமக்குள்ளே தரிசித்து பேரின்பம் கூடிவர வேதங்கள் துதிக்க விண்ணுலகத்திற்குச் சென்று இறைவனின் திருவடியைச் சேருவார்கள்.

பாடல் #103

பாடல் #103: பாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை

அளவில் இளமையும் அந்தமும் ஈறும்
அளவியல் காலமும் நாலும் உணரில்
தளர்விலன் சங்கரன் தன்னடி யார்சொல்
அளவில் பெருமை அறியயற் காமே.

விளக்கம்:

உயிர்கள் ஆரம்பத்தில் எப்போதுமே இளமையாகவே இருப்போம் அது அளவில்லாதது என்று கருதிக்கொள்வது இளமையின் தன்மை. அந்த இளமையின் முடிவாகத் தோன்றுவது முதுமையின் தன்மை. அந்த முதுமைக்குப் பின் வாழ்க்கையின் முடிவாக வருவது இறப்பின் தன்மை. பிறக்கும் முன்பே வரையறுக்கப்பட்டு பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் இயங்குவது காலத்தின் தன்மை ஆகிய நான்கு தன்மைகளும் இயல்பிலேயே மாயையால் உருவாக்கப்பட்டன என்பதை உணர்ந்துகொண்டால் அந்த மாயையை என்றும் தளராமல் அறுக்கும் சங்கரனின் (அழிப்பவன்) தன்மையை உணரலாம். அப்படி உணர்ந்த சிவனடியார்கள் தாம் உணர்ந்த சங்கரனின் தன்மைகளை எடுத்துச் சொன்னால், அது ஹரிக்கும் (திருமால்) அயனுக்கும் (பிரம்மன்) எட்டாத அளவு பெருமை உடையதாக இருக்கின்றது.

பாடல் #104

பாடல் #104: பாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை

ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத் தலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார்
பேதித் துலகம் பிணங்குகின் றார்களே.

விளக்கம்:

ஆதியிலிருந்து அனைத்திற்கும் ஆரம்பமாக இருக்கின்ற உருத்திரனும் அணிகின்ற மணிகளைப் போன்ற நீல நிறம் படைத்த திருமாலும் படைப்புத் தந்தையாக தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும் ஆகிய இவர்கள் மூவரும் யார் என்று ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் தமக்குக் கொடுக்கப்பட்ட தொழில்களில் தனிப்பட்டு நின்றாலும் அவர்களுக்குள் இருந்து இயக்கும் சிவத்தின் தொடர்ச்சியில் ஒன்றுபட்டு இருக்கின்றார்கள் என்பதை உணரலாம். இதை அறியாமல் அவர்களின் தொழில்களை வைத்து வேறு வேறாகப் பிரித்து, இதில் யார் பெரியவர் யார் சிறியவர் என்று தேவையில்லாத குழப்பத்தில் தமக்குள் சண்டையிட்டுக்கொண்டு உலகத்தவர்கள் துன்பப்படுகின்றார்கள்.

பாடல் #105

பாடல் #105: பாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை

ஈசன் இருக்கும் இருவினைக் கப்புறம்
பீசம் உலகில் பெருந்தெய்வ மானது
ஈசன் அதுஇது என்பார் நினைப்பிலார்
தூசு பிடித்தவர் தூரறிந்த் தார்களே.

விளக்கம்:

இறைவன் நல்வினை தீவினை ஆகிய இரண்டுமாகவே இருக்கிறான். அதையும் தாண்டி அவனை உணர வழிசெய்யும் ஓம் எனும் பிரணவ மந்திரமே இந்த உலகின் மிகப்பெரும் தெய்வமாக இருக்கின்றது. இது எதுவும் தெரியாமல் இறைவன் அதுதான் இதுதான் என்று பல்வேறாக நினைத்துக்கொண்டு அலைபவர்கள் மும்மலங்களின் மாசு படிந்து இருப்பதால் அதை அகற்றி உண்மைப் பொருளான இறைவனை உணராமலேயே இருக்கின்றார்கள்.

பாடல் #106

பாடல் #106: பாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை

சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றாகும்
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே.

விளக்கம்:

சிவபெருமானே அனைத்தின் முதல்வனாய் படைத்தலில் பிரம்மன் காத்தலில் திருமால் அழித்தலில் உருத்திரன் என்கிற மூவராகவும் அவர்களோடு சேர்ந்து அருளலில் மகேசுவரன் மறைத்தலில் சதாசிவன் என்று ஐந்து பேராகவும் சிறப்பாக நின்று உயிர்களின் உடலிலுள்ள சக்திமயங்கள் (ஏழு சக்கரங்களும் அதைத் தாண்டிய பரவெளியும்) அனைத்திலும் ஒன்றோடு ஒன்றாக கலந்து இருக்கின்றார். இவர்கள் அனைவருக்கும் மூலமாகிய பரம்பொருள் சதாசிவமூர்த்தியே ஒளியும் ஒலியுமாய் ஓங்கிப் பரவெளியில் அனைத்திற்கும் முதலாகிய சங்கரன் எனும் பெயரில் ஒருவராக இருக்கின்றார்.

பாடல் #107

பாடல் #107: பாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை

பயனறிந் தவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால்நமக் கன்னியம் இல்லை
நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்
வயனம் பெறுவீர் அவ்வானவ ராலே.

விளக்கம்:

இறைவனை அடையவேண்டும் என்பதையே பிறவிப்பயனாக அறிந்துகொண்டு அதற்கான வழிகள் என்னவென்று யோசிக்கும் அளவில் எந்தத் தெய்வத்தை வணங்கினாலும் ஒன்றே. இவர்களுக்கு திருமாலும் பிரம்மனும் அன்னியர்கள் இல்லை. முக்கண் முதல்வனாகிய குருநாதன் சிவபெருமானுக்கு சொந்தமே. ஆகையால் உண்மையான பயனை அடையவேண்டும் என்று எண்ணி எந்த வானவர்களை (தெய்வங்கள்) வணங்கினாலும் அதற்கான பயனை சதாசிவமூர்த்தியே அந்த வானவர்களாக (தெய்வங்களாக) இருந்து அருளுவார்.