பாடல் #850

பாடல் #850: மூன்றாம் தந்திரம் – 20. அமுரி தாரணை

வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்
சோதி மருந்திது சொல்லவும்வொண் ணாதே.

விளக்கம்:

உயிர்களின் உடலிலுள்ள சிவ நீரான அமுரி நீரை வீரியத்தால் உண்டாகும் வீர மருந்து என்றும் தேவர்கள் பருகும் அமிர்தம் என்றும் மங்கையருடனான போகத்திற்கு உதவும் மருந்து என்றும் குருவாகிய இறைவன் அருளிக் கூறினார். அனைத்திற்கும் தலையான முதல் மருந்து இதுவே என்று யோகியர்கள் அறிவார்கள். அப்படி அறிந்தவர்களின் உள்ளுக்குள் ஜோதி மயமாக இருக்கும் இந்த பெருமை மிக்க மருந்தின் அருமை பெருமைகளை வார்த்தைகளால் விவரித்து சொல்ல முடியாது.

பாடல் #849

பாடல் #849: மூன்றாம் தந்திரம் – 20. அமுரி தாரணை

அளக நன்னுத லாயோ ரதிசயங்
களவு காயங் கலந்தஇந் நீரிலே
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
இளகும் மேனி இருளுங் கபாலமே.

விளக்கம் :

அழகிய கூந்தலை உடையவளே ஒரு அதிசயம் உள்ளது. இந்த உடலில் மறைவாக உள்ள அமுரி நீர் உடலில் மேலே சென்று சிரத்தை அடையும் போது மிளகு, நெல்லி, மஞ்சள், வேப்பம் பருப்பு இவற்றைக் கலந்து நனறாக அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் மேன்மை அடையும். தலை மயிர் கறுப்பாக ஆகும்.

பாடல் #848

பாடல் #848: மூன்றாம் தந்திரம் – 20. அமுரி தாரணை

கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறும் நமனு மில்லையே.

விளக்கம் :

கடற்கரையின் அருகே சேரும் அலைகளின் நுரைகலந்த உப்புநீர் எதற்கும் உதவாது அதை ஒதுக்கிவிட வேண்டும் என்று அறிவில்லாத மனிதர்கள் கூறுவார்கள். ஆனால் அந்த அலைகளின் நுரைகலந்த உப்புநீரிலிந்து நுரையையும் அழுக்கையும் நீக்கிவிட்டு சுத்தமான உப்பாக்கி அதை உணவில் கலந்து சுவையோடு உண்ணத் தெரியும் அறிவுள்ள மனிதர்கள் வீணாக்க மாட்டார்கள். அதுபோலவே உயிர்களின் உடலின் கழிவு உப்புக்கள் நிறைந்த சிறுநீர் எதற்கும் பயன்படாது அதை வெளியேற்றிவிடு என்பவர்கள் அறிவில்லாத மனிதர்கள். அந்த உப்புக்கள் நிறைந்த சிறுநீர்ப் பைக்கு அருகிலேயே இருக்கும் சுக்கிலத்தை அடி வயிற்று நெருப்பால் சுத்தமாக்கி சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் சென்று சகஸ்ரதளத்தில் சேர்க்கும் வழியறியந்த அறிவுள்ள யோகியர் அதை வீணாக்காமல் செய்தால் அவர்களின் நரை முடிகள் கருத்து சுருங்கிய தோல்கள் இளைமை பெற்று முதுமையை வென்று என்றும் இறப்பில்லாமல் பேரின்பத்தில் வாழ்வார்கள்.

பாடல் #847

பாடல் #847: மூன்றாம் தந்திரம் – 20. அமுரி தாரணை

நூறும் மிளகு நுகருஞ் சிவத்தினீர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்
தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயிரும் ஆமே.

விளக்கம்:

நூறு மிளகு அளவு சிவ அமுரி நீரை மூச்சுக்காற்றோடு கலந்து அதனை சுழுமுனை நாடியின் உச்சித் துளைக்குக் கொண்டு சேர்த்தால் உடல் பொன் மேனியாக மாறி ஒளிபெற்றுத் திகழும். நரைகூடிய வெள்ளை முடிகளும் மிகவும் கருமையாக மாறும். யோகிக்கு இதை விட சிறந்த மருந்து வேறொன்றும் இல்லை.

பாடல் #846

பாடல் #846: மூன்றாம் தந்திரம் – 20. அமுரி தாரணை

தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரும் ஓராண்டில் ஊனமொன் றில்லை
வளியுறும் எட்டில் மனமும் ஒடுங்கும்
களிதரும் காயம் கனகம தாமே.

விளக்கம் :

தெளிவைத் தரும் இந்த சிவநீரான அமுரி நீரை பருகினால் ஓரு வருட காலத்தில் அறிவு மிக தெளிவாகும். உடலில் உள்ள நோய் இளைப்பு முதலிய அனைத்து குறைகளும் நீங்கும். இந்த நீர் மூச்சுக்காற்றுடன் கலந்து உடலில் மேலே ஏறுவதை எட்டு ஆண்டுகள் பயிற்சி செய்தால் மனம் கீழ் செல்லாமல் எப்போதும் மேலேயே நிற்கும் அதனால் மன ஒருமை உண்டாகும். சிவ இன்பத்திற்குரிய இவ்உடம்பு பொன் போல அழகு பெற்று விளங்கும்.

பாடல் #845

பாடல் #845: மூன்றாம் தந்திரம் – 20. அமுரி தாரணை

உடலிற் கிடந்த உறுதிக் குடிநீர்க்
கடலிற் சிறுகிணற் றேமிட் டாலொக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில்
நடலைப் படாதுயிர் நாடலு மாமே.

விளக்கம்:

குடிக்க முடியாத உப்பு நீரைக் கொண்ட கடலுக்கு அருகே ஒரு சிறு கிணறு தோண்டி ஏற்றம் இறைத்தால் சுத்தமான குடிநீர் வருவதைப் போலவே உயிர்களின் உடல் கழிவு உப்புக்கள் நிறைந்த சிறுநீருக்கு அருகிலேயே ஆற்றல் மிக்க அமுரி நீர் இருக்கிறது. அதை சிறுநீருடன் கலந்து வெளியேற்றி வீணாக்காமல் மேல் நோக்கி சுழுமுனை நாடிவழியே எடுத்துச் சென்றால் என்றும் அழியாமல் உயிர் நிலைத்து நிற்கும்.

பாடல் #844

பாடல் #844: மூன்றாம் தந்திரம் – 19 பரியாங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு
தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது
ஊரில்லை காணும் ஒளியது ஒன்றுண்டு
கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே.

விளக்கம் :

தலை உச்சியில் ஆயிரம் இதழ்த் தாமரை ஒன்று உண்டு. அது ஞான வெளியில் இருப்பதால் அங்கு நிலமோ நீரோ இல்லை. இந்தத்தாமரை வேர் இல்லாமல் மலர்ந்தே உள்ளது. அதனால் அதற்கு மொட்டும் இல்லை. அது ஒளியால் நிரம்பி உள்ளது. ஒளி எங்கும் பரவி இருப்பதால் அதற்கு குறிப்பிட்ட இடத்தில் தான் இருக்கும் என்று இல்லை. ஓளிக்கு காரணம் இந்த தாமரையே என்றாலும் அதற்கு அடியும் இல்லை நுனியும் இல்லை.

பாடல் #843

பாடல் #843: மூன்றாம் தந்திரம் – 19 பரியாங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

உதமறிந் தங்கே ஒருசுழிப் பட்டாற்
கதமறிந் தங்கே கபாலங் கறுக்கும்
இதமறிந் தென்றும் இருப்பாள் ஒருத்தி
பதமறிந் தும்முளே பார்கடிந் தாளே.

விளக்கம் :

போகத்தை அனுபவிக்கத் தகுதியான வழியை அறிந்து அதை நன்கு பயின்றால் தலையிலுள்ள உரோமம் கறுக்கும் சாதகருக்கு தேவையான நன்மை கருதி சக்தியும் அவனை அறிந்து செயல் புரிவாள். சாதகரின் காலத்தை அறிந்து அவரின் உணர்வில் உள்ள உலகியல் எண்ணத்தை போக்கி அருள்வாள்.

பாடல் #842

பாடல் #842: மூன்றாம் தந்திரம் – 19 பரியாங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

வாங்க லிறுதலை வாங்கலில் வாங்கிய
வீங்க வலிக்கும் விரகறி வாரில்லை
வீங்க வலிக்கும் விரகறி வாளரும்
ஓங்கிய தன்னை உதம்பண்ணி னாரே.

விளக்கம்:

துணைவி பெற்றுக்கொள்ளும் துணைவனின் சுக்கிலத்தை வெளியே நீக்காமல் பரியங்க யோகத்தின் மூலம் உள்வாங்கிக் கொள்ளும் முறையில் சுக்கிலத்தை உடம்பினுள் ஆற்றலாய் மாற்றுகின்ற வழியை அறிகின்றவர் ஒருவரும் இல்லை. அவ்வழியை அறிந்தவர் இறைவனை அடையும் வழியை அறிந்தவராவார்.

பாடல் #841

பாடல் #841: மூன்றாம் தந்திரம் – 19 பரியாங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

மின்னிடை யாளுமின் னாளனுங் கூட்டத்துப்
பொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து
தன்னொடு தன்னைத் தலைப்பெய்ய வல்லிரேல்
மண்ணிடைப் பல்லூழி வாழலு மாமே.

விளக்கம் :

பரியாங்க யோகத்தின் மூலம் மின்னல் போன்ற இடையை உடைய சக்தியையும் அவளை ஆள்பவனாகிய சிவனையும் அவர்கள் கூட்டத்துடன் பொன்னொளி கொண்ட ஆகாயத்தில் நிலை பெறும்படி செய்து அக்கூட்டத்தில் யோகி ஆன்மாவாகிய தன்னையும் பார்த்தால் இவ்வுலகத்தில் நெடுங்காலம் வாழ்வார்.