பாடல் #1704: ஏழாம் தந்திரம் – 1. ஆறு ஆதாரம் (ஆறு ஆதார சக்கரங்களின் மூலம் பெறும் பயன்கள்)
நாலு மிருமூன்று மீரைந்து மீராறுங்
கோலின் மேல்நின்ற குறிகள் பதினாறு
மூலங் கண்டாங்கே முடிந்த முதலிரண்
டுங்காலங் கண்டானடி காணலு மாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
நாலு மிருமூனறு மீரைநது மீராறுங
கொலின மெலநினற குறிகள பதினாறு
மூலங கணடாஙகெ முடிநத முதலிரண
டுஙகாலங கணடானடி காணலு மாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
நாலும் இரு மூன்றும் ஈர் ஐந்தும் ஈர் ஆறும்
கோலின் மேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலம் கண்டு ஆங்கே முடிந்த முதல் இரண்டும்
காலம் கண்டான் அடி காணலும் ஆமே.
பதப்பொருள்:
நாலும் (நான்கு இதழ்கள் கொண்ட மூலாதாரமும்) இரு (இரண்டும்) மூன்றும் (மூன்றும் பெருக்கி வரும் மொத்தம் ஆறு இதழ்கள் கொண்ட சுவாதிட்டானமும்) ஈர் (இரண்டும்) ஐந்தும் (ஐந்தும் பெருக்கி வரும் மொத்தம் பத்து இதழ்கள் கொண்ட மணிப்பூரகமும்) ஈர் (இரண்டும்) ஆறும் (ஆறும் பெருக்கி வரும் மொத்தம் பன்னிரண்டு இதழ்கள் கொண்ட அநாகதமும்)
கோலின் (சுழுமுனை நாடியின்) மேல் (மேல்) நின்ற (நிற்கின்ற) குறிகள் (இந்த சக்கரங்களாகிய குறிகளோடு) பதினாறும் (பதினாறு இதழ்கள் கொண்ட விசுக்தியும் தாண்டி)
மூலம் (இறைவனின் திருவடிகளை காண்பதற்கு மூலமாக இருக்கின்ற) கண்டு (நீல நிற ஜோதியை கண்டு) ஆங்கே (நெற்றிக்கு நடுவில் புருவ மத்தியில்) முடிந்த (வினைகள் முடிவதற்கு) முதல் (முதலாக இருக்கின்ற ஆக்ஞா சக்கரத்தில்) இரண்டும் (பிறவிக்கு காரணமாகிய நல் வினை தீ வினை ஆகிய இரண்டும் நீங்கி விட)
காலம் (காலத்தை படைத்தவனும்) கண்டான் (இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய மூன்று காலங்களையும் கண்டு அறிந்தவனும் ஆகிய இறைவனின்) அடி (திருவடிகளை) காணலும் (தரிசிக்கவும்) ஆமே (முடியும்).
விளக்கம்:
நான்கு இதழ்கள் கொண்ட மூலாதாரமும், ஆறு இதழ்கள் கொண்ட சுவாதிட்டானமும், பத்து இதழ்கள் கொண்ட மணிப்பூரகமும், பன்னிரண்டு இதழ்கள் கொண்ட அநாகதமும், சுழுமுனை நாடியின் மேல் நிற்கின்ற இந்த சக்கரங்களாகிய குறிகளோடு பதினாறு இதழ்கள் கொண்ட விசுக்தியும் தாண்டி, இறைவனின் திருவடிகளை காண்பதற்கு மூலமாக இருக்கின்ற நீல நிற ஜோதியை கண்டு, நெற்றிக்கு நடுவில் புருவ மத்தியில் வினைகள் முடிவதற்கு முதலாக இருக்கின்ற ஆக்ஞா சக்கரத்தில் பிறவிக்கு காரணமாகிய நல் வினை தீ வினை ஆகிய இரண்டும் நீங்கி விட, காலத்தை படைத்தவனும் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய மூன்று காலங்களையும் கண்டு அறிந்தவனும் ஆகிய இறைவனின் திருவடிகளை தரிசிக்கவும் முடியும்.