பாடல் #1762: ஏழாம் தந்திரம் – 5. ஆத்மலிங்கம்
அன்று நின்றான் கிடந்தானவ னென்றுஞ்
சென்று நின்றெண்திசை யேத்துவர் தேவர்க
ளென்று நின்றேத்துவ ரெம்பெருமான் தன்னை
யொன்றி யென்னுள்ளத்தி னுள்ளிருந் தானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
அனறு நினறான கிடநதானவ னெனறுஞ
செனறு நினறெணடிசை யெததுவர தெவரக
ளெனறு நினறெததுவ ரெமபெருமான றனனை
யொனறி யெனனுளளததி னுளளிருந தானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
அன்று நின்றான் கிடந்தான் அவன் என்றும்
சென்று நின்று எண் திசை ஏத்துவர் தேவர்கள்
என்று நின்று ஏத்துவர் எம் பெருமான் தன்னை
ஒன்றி என் உள்ளத்தின் உள் இருந்தானே.
பதப்பொருள்:
அன்று (ஆத்ம இலிங்க வடிவத்தில் அடி முடி காண முடியாத அண்ணாமலையாக அன்று) நின்றான் (நின்றான் இறைவன்) கிடந்தான் (ஐந்து பூதங்களுடன் சேர்ந்தே கிடந்தான் இறைவன்) அவன் (அவனே) என்றும் (எல்லா காலத்திலும்)
சென்று (உலகமெங்கும் சென்று) நின்று (அனைத்தையும் இயங்குவதையும் செய்து) எண் (எட்டு) திசை (திசைகளிலும் கலந்து நிற்கின்றான் இறைவன்) ஏத்துவர் (அவனை போற்றி வணங்குகின்ற) தேவர்கள் (தேவர்களும்)
என்று (அனைத்திலும் நின்று கிடந்து இயக்குகின்றான் இறைவன் என்று) நின்று (தாங்களும் நின்று) ஏத்துவர் (போற்றி வணங்குவார்கள்) எம் (எமது) பெருமான் (தலைவனாகிய இறைவன்) தன்னை (தன்னை)
ஒன்றி (அவன் எம்மோடு கலந்து நின்று) என் (எமது) உள்ளத்தின் (உள்ளத்திற்கு) உள் (உள்ளே) இருந்தானே (வீற்றிருந்தான்).
விளக்கம்:
ஆத்ம இலிங்க வடிவத்தில் அடி முடி காண முடியாத அண்ணாமலையாக அன்று நின்றான் இறைவன். ஐந்து பூதங்களுடன் சேர்ந்தே கிடந்தான் இறைவன். அவனே எல்லா காலத்திலும் உலகமெங்கும் சென்று அனைத்தையும் இயங்குவதையும் செய்து எட்டு திசைகளிலும் கலந்து நிற்கின்றான், அவனை போற்றி வணங்குகின்ற தேவர்களும் அனைத்திலும் நின்று கிடந்து இயக்குகின்றான் இறைவன் என்று எமது தலைவனாகிய இறைவனை தாங்களும் நின்று போற்றி வணங்குவார்கள். அவன் எம்மோடு கலந்து நின்று எமது உள்ளத்திற்கு உள்ளே வீற்றிருந்தான்.