பாடல் #1792

பாடல் #1792: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

பொருள் பேதமீச னிரவும் பகலு
முருவது வாவ துடலு முயிரு
மருளது வாவ தறமுந் தவமும்
பொருளது வுண்ணின்ற போகம தாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பொருள பெதமீச னிரவும பகலு
முருவது வாவ துடலு முயிரு
மருளது வாவ தறமுந தவமும
பொருளது வுணணினற பொகம தாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பொருள் பேதம் ஈசன் இரவும் பகலும்
உரு அது ஆவது உடலும் உயிரும்
அருள் அது ஆவது அறமும் தவமும்
பொருள் அது உள் நின்ற போகம் அது ஆமே.

பதப்பொருள்:

பொருள் (மாயையாகிய உலகத்தில் பொருளாக) பேதம் (பிரித்து அறிந்து கொள்ள) ஈசன் (இறைவன் அருளியது) இரவும் (இரவும்) பகலும் (பகலுமாகிய இரண்டு நிலைகளே ஆகும்)
உரு (அதை அனுபவிக்கின்ற உருவம்) அது (அது) ஆவது (ஆக இருப்பது) உடலும் (இறைவன் அருளிய உடலும்) உயிரும் (அதற்குள் இருக்கின்ற உயிரும் ஆகும்)
அருள் (இறைவன் கொடுக்கின்ற திருவருள்) அது (அது) ஆவது (ஆக இருப்பது) அறமும் (அடியவர்கள் கடைபிடிக்கின்ற தர்மங்களும்) தவமும் (மேற்கொள்ளுகின்ற தவங்களும் ஆகும்)
பொருள் (உண்மைப் பொருள்) அது (அது ஆக இருப்பது) உள் (அடியவருக்குள்) நின்ற (இறையருளாக நிற்கின்ற) போகம் (பேரின்பம்) அது (அதுவே) ஆமே (ஆகும்).

விளக்கம்:

மாயையாகிய உலகத்தில் பொருளாக பிரித்து அறிந்து கொள்ள இறைவன் அருளியது இரவும் பகலுமாகிய இரண்டு நிலைகளே ஆகும். அதை வினைகளுக்கு ஏற்ப அனுபவிக்கின்ற உருவமாக இருப்பது இறைவன் அருளிய உடலும் அதற்குள் இருக்கின்ற உயிரும் ஆகும். அப்படி வினைகளை அனுபவித்துக் கொண்டு இருந்தாலும் இறையருளால் உள்ளுக்குள் உணர்த்தப்பட்ட தர்மத்தை முறைப்படி கடை பிடிக்கின்றவர்களுக்கு அந்த தர்மத்தின் பலனும் அவர்கள் மேற்கொண்ட தவத்தின் பலனுமே இறைவன் கொடுக்கின்ற திருவருளாக இருக்கின்றது. அந்த திருவருளே உண்மைப் பொருளாக அடியவருக்குள் நிற்கின்ற பேரின்பம் ஆகும்.

பாடல் #1793

பாடல் #1793: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

காண்டற் கரியன் கருத்தில னந்தியுந்
தீண்டற்குஞ் சார்தற்குஞ் சேயனாதந் தோன்றிடும்
வேண்டிக் கிடந்து விளக்கொளி யாய்நேச
மீண்டிக் கிடந்தங்கு இருளறு மாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

காணடற கரியன கருததில னநதியுந
தீணடறகுஞ சாரதறகுஞ செயனாதந தொனறிடும
வெணடிக கிடநது விளககொளி யாயநெச
மீணடிக கிடநதஙகு இருளறு மாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

காண்டற்கு அரியன் கருத்து இலன் நந்தியும்
தீண்டற்கும் சார்தற்கும் சேயன் நாதம் தோன்றிடும்
வேண்டி கிடந்து விளக்கு ஒளி ஆய் நேசம்
ஈண்டி கிடந்து அங்கு இருள் அறும் ஆறே.

பதப்பொருள்:

காண்டற்கு (கண்களால் பார்த்து அறிந்து கொள்ளுவதற்கு) அரியன் (மிகவும் கடினமானவன்) கருத்து (எண்ணங்களால் யோசித்து பார்த்து அறிந்து கொள்ள) இலன் (முடியாதவன்) நந்தியும் (உள்ளுக்குள் குருநாதனாக இருந்து வழிகாட்டுகின்ற இறைவன்)
தீண்டற்கும் (வெளியில் தீண்டி பார்ப்பதற்கும்) சார்தற்கும் (பற்றிக் கொண்டு இருப்பதற்கும்) சேயன் (முடியாதபடி தொலைவில் இருக்கின்றவன்) நாதம் (உள்ளுக்குள்ளே நாதமாக) தோன்றிடும் (தோன்றுபவன்)
வேண்டி (அவன் மட்டுமே வேண்டும் என்று வேண்டி) கிடந்து (கிடக்கின்ற அடியவர்களுக்கு) விளக்கு (உள்ளுக்குள் விளக்கில் இருக்கின்ற) ஒளி (ஜோதி) ஆய் (ஆகிய) நேசம் (அன்பின் வடிவமாக வருகின்றவன்)
ஈண்டி (திருவளாகிய இவற்றை பெற்றுக் கொண்டு) கிடந்து (அதிலேயே கிடக்கும் போது) அங்கு (அடியவரின் உள்ளுக்குள் இருக்கின்ற) இருள் (அனைத்து விதமான மலங்களும்) அறும் (நீங்கிப் போய்விடும்) ஆறே (வழியாக அதுவே இருக்கும்).

விளக்கம்:

கண்களால் பார்த்து அறிந்து கொள்ளுவதற்கு மிகவும் கடினமானவன், எண்ணங்களால் யோசித்து பார்த்து அறிந்து கொள்ள முடியாதவன், உள்ளுக்குள் குருநாதனாக இருந்து வழிகாட்டுகின்ற இறைவன், வெளியில் தீண்டி பார்ப்பதற்கும் பற்றிக் கொண்டு இருப்பதற்கும் முடியாதபடி தொலைவில் இருக்கின்றவன், உள்ளுக்குள்ளே நாதமாக தோன்றுபவன், அவன் மட்டுமே வேண்டும் என்று வேண்டி கிடக்கின்ற அடியவர்களுக்கு உள்ளுக்குள் விளக்கில் இருக்கின்ற ஜோதியாகிய அன்பின் வடிவமாக வருகின்றவன். இப்படிப்பட்ட இறைவனின் திருவருளை பெற்றுக் கொண்டு அதிலேயே கிடக்கும் போது அடியவரின் உள்ளுக்குள் இருக்கின்ற அனைத்து விதமான மலங்களும் நீங்கிப் போய்விடும் வழியாக அதுவே இருக்கும்.

பாடல் #1794

பாடல் #1794: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)

குறிப்பினி னுள்ளே குவலையந் தோன்றும்
வெறுப்பிரு ணீக்கில் விகிர்தனு நிற்குஞ்
செறிப்புறு சிந்தையைச் சிக்கென நாடி
லறிப்புறு காட்சி யமரரு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

குறிபபினி னுளளெ குவலையந தொனறும
வெறுபபிரு ணீககில விகிரதனு நிறகுஞ
செறிபபுறு சிநதையைச சிககென நாடி
லறிபபுறு காடசி யமரரு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்
வெறுப்பு இருள் நீக்கில் விகிர்தனும் நிற்கும்
செறிப்பு உறு சிந்தையை சிக்கென நாடில்
அறிப்பு உறு காட்சி அமரரும் ஆமே.

பதப்பொருள்:

குறிப்பினின் (உள்ளுக்குள் தோன்றும் ஜோதியாகிய இறைவனையே குறிக்கோளாக கொண்டு தியானிக்கின்ற அடியவர்களின்) உள்ளே (உள்ளே) குவலயம் (அண்ட சராசரங்களும் அதிலுள்ள அனைத்தும்) தோன்றும் (உண்மைப் பொருளாக தோன்றும் அந்த திருவருள் ஜோதியால்)
வெறுப்பு (ஆணவமாகிய) இருள் (மலத்தை) நீக்கில் (நீக்கி விட்டால்) விகிர்தனும் (அனைத்திலும் மாறுபட்டவனாகிய இறைவன்) நிற்கும் (அடியவருக்குள் வந்து நிற்பான்)
செறிப்பு (அந்த இறைவனுக்கு நெருக்கமாக இருப்பதில்) உறு (உறுதியாக நிற்கின்ற) சிந்தையை (சிந்தனையை) சிக்கென (விடாது பற்றிக் கொண்டு) நாடில் (இறைவனை தேடும் போது)
அறிப்பு (உள்ளுக்குள் உணரக்கூடிய) உறு (முழுமையான) காட்சி (திருவருள் காட்சி தோன்றும்) அமரரும் (அதை தரிசித்து தாமும் இறப்பு இல்லாத நிலையை) ஆமே (அடையலாம்).

விளக்கம்:

உள்ளுக்குள் தோன்றும் ஜோதியாகிய இறைவனையே குறிக்கோளாக கொண்டு தியானிக்கின்ற அடியவர்களின் உள்ளே அண்ட சராசரங்களும் அதிலுள்ள அனைத்தும் உண்மைப் பொருளாக தோன்றும். அந்த திருவருள் ஜோதியால் ஆணவமாகிய மலத்தை நீக்கி விட்டால் அனைத்திலும் மாறுபட்டவனாகிய இறைவன் அடியவருக்குள் வந்து நிற்பான். அந்த இறைவனுக்கு நெருக்கமாக இருப்பதில் உறுதியாக நிற்கின்ற சிந்தனையை விடாது பற்றிக் கொண்டு இறைவனை தேடும் போது உள்ளுக்குள் உணரக்கூடிய முழுமையான திருவருள் காட்சி தோன்றும். அதை தரிசித்து தாமும் இறப்பு இல்லாத நிலையை அடையலாம்.

பாடல் #1791

பாடல் #1791: ஏழாம் தந்திரம் – 8. சம்பிரதாயம் (இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறையாக கடைபிடிப்பது)

பெருந்தண்மை தானென யானென வேறா
யிருந்தது மில்லை யதீச னறியும்
பொருந்து முடலுயிர் போலுண்மை மெய்யே
திருந்துமுன் செய்கின்ற தேவர் பிரானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பெருநதணமை தானென யானென வெறா
யிருநதது மிலலை யதீச னறியும
பொருநது முடலுயிர பொலுணமை மெயயெ
திருநதுமுன செயகினற தெவர பிரானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பெரும் தண்மை தான் என யான் என வேறு ஆய்
இருந்ததும் இல்லை அது ஈசன் அறியும்
பொருந்தும் உடல் உயிர் போல் உண்மை மெய்யே
திருந்தும் முன் செய்கின்ற தேவர் பிரானே.

பதப்பொருள்:

பெரும் (மிகப் பெரிய) தண்மை (சாந்த நிலையில்) தான் (இறைவன்) என (என்றும்) யான் (அடியவர்) என (என்றும்) வேறு (வேறு வேறு) ஆய் (ஆக பிரிந்து)
இருந்ததும் (இருக்கின்ற நிலை) இல்லை (இல்லாமல் எப்போதும் ஒன்றாகவே சேர்ந்து இருக்கின்ற) அது (அந்த நிலையை) ஈசன் (இறைவனே) அறியும் (அறிவான்)
பொருந்தும் (ஒன்றாக பொருந்தி இருக்கின்ற) உடல் (உடலும்) உயிர் (உயிரும்) போல் (போலவே) உண்மை (பேருண்மையாகிய தர்மத்தை) மெய்யே (எப்போதும் பொருந்தி இருக்கின்ற உடலாகவே)
திருந்தும் (அடியவரின் உடல் அழிந்து போவதற்கு) முன் (முன்) செய்கின்ற (மாற்றி அருளுவதை செய்கின்றவன்) தேவர் (தேவர்களுக்கெல்லாம்) பிரானே (தலைவனாகிய இறைவனே ஆகும்).

விளக்கம்:

மிகப் பெரிய சாந்த நிலையில் இறைவன் என்றும் அடியவர் என்றும் வேறு வேறாக பிரிந்து இருக்கின்ற நிலை இல்லாமல் எப்போதும் ஒன்றாகவே சேர்ந்து இருக்கின்ற அந்த நிலையை இறைவனே அறிவான். அடியவரின் உடல் அழிந்து போவதற்கு முன் உடலும் உயிரும் ஒன்றாக பொருந்தி இருப்பதை போலவே பேருண்மையாகிய தர்மத்தை எப்போதும் பொருந்தி இருக்கின்ற உடலாகவே இறையருளால் உணர்த்தப் பட்ட தர்மத்தை முறைப்படி கடைபிடிக்கின்ற அடியவரின் உடலை மாற்றி அருளுகின்றான் தேவர்களுக்கெல்லாம் தலைவனாகிய இறைவன்.